மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
பெரம்பலூர், மே 11: மஞ்சள் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அறுவடைக்கு ஆள் கிடைக்காமலும், மஞ்சளைப் பதப்படுத்த ஸ்டீமர் இல்லா


பெரம்பலூர், மே 11: மஞ்சள் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அறுவடைக்கு ஆள் கிடைக்காமலும், மஞ்சளைப் பதப்படுத்த ஸ்டீமர் இல்லாததாலும், வேளாண்மைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமளவில் வானம் பார்த்த, மானாவாரி நிலங்களைக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காசோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை அதிகளவு பயிரிட்டு வந்த விவசாயிகள் தற்போது, நிகழாண்டு மஞ்சளின் மகத்துவம் அறிந்து மஞ்சள் சாகுபடியில் தீவிரக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, பருத்தி சாகுபடியில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம், போலி விதைகளாலும், போதிய மழை இல்லாததாலும் 2005 ஆம் ஆண்டில் பருத்தி விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் மகசூல் இழப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாற்றுப் பயிராக மக்காசோளம் சாகுபடி செய்யத் தொடங்கினர். இதனால், தமிழகத்திலேயே மக்காசோளம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால், மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சியால் மகசூல் பாதிப்பு, எதிர்பார்த்த விலை இல்லாததால், மக்காசோளத்தையும் புறக்கணிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, எசனை, நெற்குணம், மளையாளப்பட்டி, வேப்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, கடந்த 2008 ஆம் ஆண்டைவிட நிகழாண்டு சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி கூடுதலாகச் செய்யப்பட்டு, தற்போது அறுவடை சீசன் நடைபெற்று வருகிறது.
மஞ்சள் அறுவடை தொடங்கி, ஓரிரு வாரத்திலேயே அதன் கொள்முதல் விலையும், கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு இரு மடங்காகி உள்ளது. தற்போது, ஈரோடு மாவட்ட மஞ்சள் மண்டியில் ஒரு குவிண்டால் ரூ.17,940-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறும் விவசாயிகள், வறட்சி அதிகமானால் இன்னும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
மஞ்சள் கொள்முதல் விலை உயர்வு, ஒருபுறம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், மஞ்சளை வெட்டி எடுக்க ஆள் கிடைக்காமலும், வெட்டி எடுக்கப்பட்ட மஞ்சள் கிழங்குகளை நீராவியில் அவித்து பதப்படுத்தும் ஸ்டீமர் எனப்படும் நீராவி இயந்திரம் இல்லாததாலும் அவதிப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மஞ்சள் பதப்படுத்தும் நீராவி இயந்திரங்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து, வாடகைக்கு கொண்டு வரும் சூழ்நிலையில், உரிய நேரத்தில் வாடகை இயந்திரம் கிடைக்காமலும், வாடகை கட்டணம் இரு மடங்கு தரும் நிலையிலும் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும், தமிழக அரசு வேளாண் துறை மூலம் மானிய விலையில் மஞ்சளை பதப்படுத்தும் ஸ்டீமர் இயந்திரம், மஞ்சள் அறுவடை இயந்திரம் ஆகியவற்றை வழங்கி, மஞ்சள் பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தால், பெரம்பலூர் மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
இதனிடையே, மஞ்சள் கொள்முதல் விலை உச்சத்தில் உள்ளதால் பருத்தி, மக்காசோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்த விவசாயிகள், வரும் ஆண்டில் மஞ்சள் சாகுபடி செய்யத் தயாராகி வருகின்றனர். இதனால், விதை மஞ்சளுக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட விதை மஞ்சள் தற்போது, ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவ குணம் நிறைந்த, தோட்டப்பயிரான மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...