டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கற்கும் பாரதம் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுமா?

பெரம்பலூர், ஜூலை 23:    மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.   கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்க

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:50 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர், ஜூலை 23:    மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

  கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வளர் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரிய கிராமப் புறங்களில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்த வேலையில்லா இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்துக்கும் பணியாளர்கள்  நியமிக்கப்பட்டு, மைய பொறுப்பாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.700, உதவியாளர்களுக்கு ரூ.500 வழங்கப்பட்டு வந்தது.

     இதில் பணிபுரியும் பணியாளர்கள், கிராமப் புறங்களுக்குச் சென்று, அப் பகுதி பொதுமக்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு, சிறுசேமிப்புத் திட்டம், கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலைப் பட்டியல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினரின் செயல்பாடு, வங்கிகளில் எவ்வாறு கடன் பெறுவது என்பன உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை விளக்கிக் கூறி, பொதுமக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

     இந்நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வளர் கல்வித் திட்டம் முடங்கியது. ஆனால், அந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த  அனைவரும் தன்னார்வப் பணியாளர்களாகப் பணிபுரிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், 2008 முதல் 2009 வரை தன்னார்வப் பணியாளர்களாக, எவ்வித ஊதியமும் பெறாமல் அதே பணியில் ஈடுபட்டு வந்தனர்.

     இந்நிலையில், கடந்த 7.4.2010 ஆம் தேதி முதல்  தமிழகத்தில் கற்கும் பாரதம் என்ற புதிய திட்டம் மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாவட்டங்களில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுவதே இதன் நோக்கமாகும். இதற்கான செலவை மாநில அரசு 25 சதமும், மத்திய அரசு 75 சதமும் ஏற்றுக் கொள்ளும்.

   தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் கீழ், கல்வியறிவு, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள தர்மபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், முதல் கட்டமாக,  திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 5 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்துக்காக, மத்திய அரசால் ரூ. 81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 9 கோடி தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு பாடம் கற்பிக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மை அலுவலர் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தர்மபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து  மாவட்டங்களிலும், ஏற்கெனவே வளர் கல்வி திட்டத்தில் பணிபுரிந்தவர்களில் நேர்முகத் தேர்வு மூலம் 4,408 பேர் இந்தத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்குநர், உதவியாளர் பணியிடத்துக்கு மாதம் ரூ. 2000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், மாவட்டம் தோறும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

   ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் பணியில்  ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றன.

   இதுகுறித்து, கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர் கூறியது:

   ஏற்கெனவே பணிபுரிந்த, வளர் கல்வி திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்கப்படாததால், விவசாய வேலை செய்து வந்தோம். தற்போது புதிதாகத் தொடங்கப்பட்ட கற்கும் பாரதம் திட்டத்திலும் அதே நிலை நீடிக்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க, தமிழக அரசிடம் இருந்து தொகை பெறப்பட்டும் மாவட்ட நிர்வாகம் காலதாமதப்படுத்தி வருகிறது என்றார் அவர்.

   எனவே, கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊக்குநர்கள், உதவியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.