புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுமா?
பெரம்பலூர், ஜன. 31: பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியில், கடந


பெரம்பலூர், ஜன. 31: பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியில், கடந்த 1975-ம் ஆண்டு தமிழக அரசால் புதை சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதில் 80 சதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பேரூராட்சி அருகேயுள்ள பெண்ணகோணம், சு. ஆடுதுறை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், புதை சாக்கடை திட்டத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
1976-ம் ஆண்டு, மாவட்ட நிர்வாகத்தால், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர், 1998-ம் ஆண்டு இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மறு ஆய்வு செய்யப்பட்டு, வேறு இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீரேற்று நிலையத்துக்கு அப்பகுதி மக்களால் 33 சென்ட் நிலம் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது.
2004-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மீண்டும் இந்தத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்து, 3 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், திட்டத்தை நிறைவேற்ற ரூ.1 கோடி செலவாகும் என்றும் கூறினர்.
இதனடிப்படையில், அப்பகுதி ஜமாத்தார்கள், ஜமாலியா கமிட்டி தொகையில் நிலம் பெறப்பட்டு, பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் இறுதி மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன.
கடந்த 2006-ம் ஆண்டு பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், 2007-2008-ம் ஆண்டில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். ஆனால், இதுவரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. லப்பைகுடிகாடு பேரூராட்சியின் புதை சாக்கடை திட்டத்துக்கு 2008-2009-ம் ஆண்டு டிட்கோ நிறுவனத்தில் இருந்து ரூ.1.30 கோடி கடன் தொகை அனுமதிக்கப்பட்டு, முன் தொகையாக ரூ.25 லட்சம் பெறப்பட்டு, அது வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.
இதற்கான வட்டித் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வங்கியில் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், பெண்ணகோணம் ஊராட்சி மன்றத் தலைவர், இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்களின் ஆலோசனையைப் பெற்று, மாவட்ட நிர்வாகம் இத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இடம் தேர்வு செய்யப்பட்ட போது, பெண்ணகோணம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் எம்.விஜயகுமாரிடம் எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்தத் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. அண்மையில், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, ஒரு தரப்பினர் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும், மறு தரப்பினர் அந்தத் திட்டத்தை ù சயல்படுத்தக் கூடாதெனவும் கூறி வருவதால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. எனவே, இரு தரப்பு மக்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, புதை சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...