திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பப்படுமா?

திருவெறும்பூர், ஆக. 23: திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதிகளில் உள்ள தடை செய்யப்பட்ட கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.   திருவெறும்பூர

Updated On :20 செப்டம்பர் 2012, 8:43 am

திருவெறும்பூர், ஆக. 23: திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதிகளில் உள்ள தடை செய்யப்பட்ட கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  திருவெறும்பூர், துவாக்குடி, திருநெடுங்குளம், சூரியூர் போன்ற பகுதிகளில் 63-க்கும் மேல்பட்ட கல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்தக் குவாரிகளில் தரைக்கு அடியில் சுமார் 300 அடிக்கும் மேலாக பாறைகளைத் தகர்த்து கல்கள் எடுக்கப்பட்டதால், கடந்த 2002-ம் ஆண்டு முதல் திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் இயங்கி வந்த அனைத்து கல் குவாரிகளும் தடை செய்யப்பட்டன.

  வாழவந்தான்கோட்டையில் 5 குவாரிகளும், சூரியூரில் ஒரு குவாரியுமே இயங்கி வருகின்றன. தடை செய்யப்பட்ட குவாரிகள் அனைத்தும் துவாக்குடி பகுதியில் சாலை ஓரங்களிலும், ஊர் நடுப் பகுதியிலும் காணப்படுகின்றன. கல் குவாரியின் மிக அருகில் வீடுகளும் உள்ளன.

   மேலும், 300 அடிக்கு மேல் பள்ளமாக உள்ள குவாரியில் 200 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்தத் தண்ணீரில் குப்பை உள்ளிட்ட தேவையற்ற கழிவுகள் கலப்பதாலும், தேங்கியே கிடப்பதாலும் விஷத் தன்மை உடையதாக உள்ளது. குவாரிகளைச் சுற்றி தடுப்புச் சுவர்கள் இல்லாததால், இதில் தவறி விழுந்து பலர் இறந்துள்ளனர்.

  கடந்த ஆண்டு துவாக்குடி அருகேயுள்ள முத்துராமலிங்கத் தெருவில், லாரியை திருப்பிய போது எதிர்பாராதவிதமாக லாரி கல் குவாரியில் விழுந்ததில் ஓட்டுநரும், உதவியாளரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த வாரம் துவாக்குடி தெற்குமலைப் பகுதியைச் சேர்ந்த ராமுதேவர் அந்தப் பகுதியில் நடந்து சென்ற போது, கால் தடுமாறி குவாரியில் விழுந்து இறந்தார்.

  இவ்வாறு விபத்திலோ, தவறி விழுந்தோ இறப்பவர்களின் உடலை உடனடியாக மீட்க முடிவதில்லை. சில நாள்களுக்குப் பிறகு மிதக்கும் சடலத்தைதான் மீட்க முடிகிறது. குவாரியில் உள்ள தண்ணீர் விஷத் தன்மை மிக்கதாக உள்ளதால், அதில் மூழ்கி உடலை எடுக்க யாரும் முன்வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

   இதுபோன்ற நிலையைத் தவிர்க்க, கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

   இதுகுறித்து துவாக்குடி மக்கள் கூறியது:

   ஒவ்வொரு குவாரியும் சுமார் 300 அடி வரை ஆழம் உள்ளது. அதில் 200 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்தத் தண்ணீர் விஷத் தன்மை வாய்ந்தது. இந்தக் குவாரிகளின் அருகிலேயே நாங்கள் வசித்து வருகிறோம். குவாரியை அருகிலிருந்து பார்த்தாலே தலைசுற்றி கீழே விழும் நிலை உள்ளது. இதனால், தெருவை ஒட்டியுள்ள இந்தக் குவாரிகளால் அந்தப் பகுதிகளில் நடமாட முடியவில்லை.

  இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் இந்தப் பகுதியில் திருப்பக்கூட முடியவில்லை. இந்தக் குவாரிகளில் சறுக்கி விழுந்தும் பலர் இறந்துள்ளனர்.

  இதுபோன்ற இறப்புகளைத் தடுக்க, ஒவ்வொரு குவாரியிலும் மண்ணைக் கொட்டி மூட வேண்டும். அல்லது அவற்றைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும். இல்லை என்றால் நாங்கள் வசிக்க அரசு வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.