லால்குடி கோயிலுக்கு புதிய தேர் அமைக்கப்படுமா?
திருச்சி, ஆக. 20: திருச்சி மாவட்டம், லால்குடி அருள்மிகு சப்தரிஷீசுவரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவுகிறது.


திருச்சி, ஆக. 20: திருச்சி மாவட்டம், லால்குடி அருள்மிகு சப்தரிஷீசுவரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவுகிறது.
தமிழகத்தில் ஓடும் ஆறுகளின் கரைகளில் பல சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. அத்தகைய கோயில்களில் ஒன்றுதான் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் திருத்தவத்துறையில் (லால்குடி) அமைந்துள்ள அருள்மிகு பெருந்திரு பிராட்டியார் உடனுறை சப்தரிஷீசுவரர் கோயில்.
அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரச, மரீசி என்ற ஏழு முனிவர்கள் தவமிருந்து இறைவனை வழிபட்டதால், இத் திருக்கோயிலின் இறைவன் சப்தரிஷீசுவரர் என்றழைக்கப்படுகிறார். காளியின் கர்வத்தை தனது நடனத்தால் இறைவன் அடக்கியதால் இத் திருக்கோயில் பைரவிவனம் எனவும் அழைக்கப்படுகிறது.
சப்தரிஷீசுவரரை திருமால் பூஜித்து தனது சக்கரத்தைப் பெற்றதாகவும், லட்சுமி தவம் செய்து திருமாலை மணம் செய்து கொண்டதாகவும் புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன.
சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில் திருத்தவத்துறையை பண்டெழுவர் தவத்துறை எனப் போற்றுகிறார். திருஞானசம்பந்தரும் இத்திருக்கோயிலைப் போற்றிப் பாடியதாக பெரிய புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரும், இத் திருக்கோயிலுக்கு வந்து பைரவி, மத்தியமாவதி, தோடி, கல்யாணி, காம்போதி ராக கீர்த்தனைகளில் இறைவனையும், தேவியையும் போற்றிப் பாடியுள்ளார்.
இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க இத் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ், புள்ளம்பாடி அருள்மிகு குழந்தாளம்மன் திருக்கோயில் உள்ளிட்ட வகையறா கோயில்கள், இடங்கிமங்கலம் விசுவநாதர் கோயில், நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன.
இத் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக, மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை உத்சவம் மிகவும் சிறப்பானது. அதிலும் குறிப்பாக, ஆருத்ரா தரிசனத்தை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவர்.
இதேபோல, ஐப்பசியில் கந்தசஷ்டி திருவிழா, ஆடி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா, கார்த்திகையில் திருக்கார்த்திகை திருவிழா, தை மாதத்தில் அம்பு போடுதல் திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் முக்கியமானவை.
பலராலும் பாடல் பெற்ற இத் திருக்கோயிலில் அந்தக் காலத்தில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் என ஐந்து சுவாமிகளுக்கும் தனித்தனியாகத் தேர்கள் இருந்து, திருவிழாக் காலங்களில் தேரோட்டமும் நடத்தப்பட்டு வந்ததது.
குறிப்பாக, அருள்மிகு சப்தரிஷீசுவரர் சுவாமி திருத்தேரோட்டம் 1936 ஆம் ஆண்டு நடைபெற்றது. கோயில் வடிவமைப்பை அப்படியே தாங்கியுள்ள மிகவும் அழகுவாய்ந்த இந்தத் தேரை வடம்பிடிக்க சுற்றுப்புறக் கிராம மக்கள் பலரும் இங்கு திரள்வர். தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்து, தேர் நிலையை அடைய ஒரு மாதம் ஆனதாம். இந்த ஒரு மாதம் முழுவதும் தேரை இழுத்த பொதுமக்களுக்கு அப்போது திருக்கோயில் சார்பில் உணவு அளிக்கப்பட்டதாம்.
இதையடுத்து, இரண்டாவது முறையாக 1955 ஆம் ஆண்டில் சுவாமி திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த முறை திருத்தேர் நிலைக்கு வருவதற்கு 3 மாதங்கள் ஆகின. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சுவாமி திருத்தேரோட்டம் நடத்துவதில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
அதன்பின்னர், திருத்தேரோட்டம் நடத்தப்படாததால் தேரின் சிற்பங்கள் எல்லாம் சேதமடைய ஆரம்பித்து, தற்போது தேர் மீது கைவைத்தால் சரிந்து விழும் நிலையிலேயே உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், தற்போது உள்ள தேரை பழுதுபார்ப்பதற்குப் பதிலாக, புதிய தேரை அமைத்தால்தான் தேரோட்டத்தை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது.
மேலும், தற்போது தேரோட்டம் நடத்த வேண்டும் என்றால் தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எல்லாம் பாரபட்சமில்லாமல் அகற்றப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் லால்குடி பக்தர்கள்.
தற்போது விநாயகர், சுப்பிரமணியர், அம்மன் தேர்களும் பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளன.
இந்த நிலையில், தற்போது அருள்மிகு பெருந்திரு பிராட்டியார் அம்மனுக்கு திருத்தேர் அமைக்கும் பணிக்காக ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை | 9 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. திட்ட அறிக்கையில் | 13 லட்சம் தேவை என்றிருந்தாலும், அரசு | 8 லட்சத்தை அளித்துள்ளது. எனினும், நன்கொடையாளர் மூலம் பற்றாக்குறை தொகையை சரிசெய்து பணிகளை மேற்கொள்ள கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சுவாமி திருத்தேரை தற்போது உள்ள நிலையில் இயக்குவது என்பது இயலாத விஷயம். யாரேனும் நன்கொடையாளர்கள் புதிதாகத் திருத்தேரை அமைத்துத் தர முன்வந்தார்கள் எனில், அவர்களை முழுமையாக வரவேற்கத் தயாராக உள்ளோம் என்கிறது கோயில் நிர்வாகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...