கூடுதல் பணிச் சுமை: மின் ஊழியர்கள் அவதி
திருச்சி, ஆக. 2: கூடுதல் பணிச் சுமையால் மின் வாரிய ஊழியர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். முந்தைய சென்னை மாகாணத்தில் மின்சாரத் துறையாக இருந்து, 1957 ஆம் ஆண்டு தனி அதிகாரம் பெற்ற அமைப்பாக ஆனது


திருச்சி, ஆக. 2: கூடுதல் பணிச் சுமையால் மின் வாரிய ஊழியர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
முந்தைய சென்னை மாகாணத்தில் மின்சாரத் துறையாக இருந்து, 1957 ஆம் ஆண்டு தனி அதிகாரம் பெற்ற அமைப்பாக ஆனது தமிழ்நாடு மின்சார வாரியம். இதைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் டிரான்ஸ்கோ, டிரான்ஸ்ஜெட்கோ ஆகியவை செயல்படுகின்றன.
2012 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மின்சாரம் என்ற இலக்கோடு மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், மாநில அரசும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது கிராமங்கள், நகரங்கள் என மின்சாரம் இல்லாத இடமே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 1,63,883 கி.மீ. தொலைவுக்கு உயர், குறைந்த அழுத்த மின் பாதைகளுடன் 1,202 துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய நிலையில், தமிழகத்தில் வீடுகளில் மின்சாரம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 1.37 கோடியாக உள்ளது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு புதிய மின் திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மின் வாரியத்தில் தற்போது அனைத்து நிலைகளிலும் குறைந்தது 60,000 காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், இதனால் தற்போது பணியாற்றி வருபவர்கள் கடும் பணிச் சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மின்சார வாரியத்தில் தினக்கூலி தொழிலாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், உதவியாளர்கள், கம்பியாளர், ஃபோர்மேன், மின் பாதை ஆய்வாளர் என தொடக்க நிலைகளில் பல்வேறு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கிராமம் முதல் நகரம் வரை மின் கம்பங்களை நடுவது முதல் இணைப்புக் கொடுத்து முடிப்பது வரை, மின் மாற்றியில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்வது, மின் கம்பிகளில் துண்டிப்பு ஏற்பட்டால் சரிசெய்வது என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் இந்த ஊழியர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களால் தற்போது வேலை பார்த்து வரும் பணியாளர்களுக்கு கடும் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டில் மின் வாரியத்தில் மஸ்தூர் தொழிலாளர்கள் 6,000 பேர் காலமுறை ஊதியத்தில் சேர்க்கப்பட்டனர். பணியில் சேர்ந்தபோது அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2 ஆண்டுகளில் அவர்கள் அனைவரும் உதவியாளர்களாக (ஹெல்பர்களாக) உயர்த்தப்படுவர் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் யாருக்கும் அந்த நிலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மஸ்தூர் தொழிலாளர்களின் நிலை இவ்வாறு உள்ள நிலையில், தற்போது சுமார் 20,000 உதவியாளர், கம்பியாளர் (வயர்மேன்) பணியிடங்கள் காலியாகவே உள்ளன என்று மின் வாரியத் தொழில் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணி ஓய்வு, பணியின் போது தொழிலாளர் இறந்தது போன்ற காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் மட்டுமல்லாது, மின் வாரியத்தில் அனைத்து நிலைகளிலும் குறைந்தது 60,000 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், இந்தக் காலிப் பணியிடங்களால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ராஜீவ் காந்தி கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (ஆர்.ஜி.ஜி.வி.ஒய்) கீழ், கிராமப்புறங்களில் மின் மாற்றிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் தற்போதுள்ள தொழிலாளர்களைக் கொண்டுதான் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு வரை பணிகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள உதிரிப் பாகங்கள் எல்லாம் பழைய காலத்தை சேர்ந்தவையாகவே உள்ளன. எனவே, இருக்கிற உதிரிப் பாகங்களை வைத்தே பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் மின் வாரிய தொழிலாளர்கள்.
மின் அலுவலகங்களில் பகுதி நேரப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு சத்துணவு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அந்த உத்தரவை மின் வாரியம் அமல்படுத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டோர்.
ஏற்கெனவே தமிழகம் மின் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், விநியோக நேரத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டுமானால், மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...