எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சி - விழுப்புரம் இடையே அக்டோபர் இறுதிக்குள் மின்சார ரயில்கள் இயக்கம்

திருச்சி, செப். 30: திருச்சி - விழுப்புரம் இடையே அக்டோபர் மாத இறுதிக்குள் மின்சார என்ஜினுடன் கூடிய ரயில்கள் இயக்கம் தொடங்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.   திருச்சி - விழுப்புரம் இடையிலான ரயில் பாதையை

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:47 pm

தி. இன்பராஜ்

திருச்சி, செப். 30: திருச்சி - விழுப்புரம் இடையே அக்டோபர் மாத இறுதிக்குள் மின்சார என்ஜினுடன் கூடிய ரயில்கள் இயக்கம் தொடங்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

  திருச்சி - விழுப்புரம் இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கல் பணி 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் அப்போதைய மொத்த மதிப்பீடு ரூ. 97 கோடி. மூன்றாண்டுகள் முடிவடைந்துவிட்டதால், இந்த மதிப்பீடு தற்போது ரூ. 127 கோடியாக உயர்ந்துவிட்டது.

  இந்த வழித்தடத்தில், ரயில் நிலையங்களில் உள்ள இரு வழி மற்றும் மூன்று வழித்தட தண்டவாளங்கள் என மொத்தம் ஏறத்தாழ 250 கி.மீ. நீளத்துக்கு மின்மயமாக்கல் பணி மேற்கொள்ளப்பட்டது.

  இந்தத் திட்டத்துக்காக விருத்தாசலம், அரியலூர், திருச்சி முடுக்குப்பட்டி ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  அரியலூர் துணை மின் நிலையப் பணிகள் முற்றிலும் முடிந்து மின் இணைப்பும் வழங்கப்பட்டுவிட்டது. விருத்தாசலம் துணை மின் நிலையப் பணிகள் ஓரிரு தினங்களில் முடியும் தருவாயில் உள்ளன.

  விழுப்புரம் - அரியலூர் இடையே சோதனை ஓட்டம் முடிந்து, தற்போது மின்சார என்ஜினுடன் கூடிய மின்சார என்ஜினுடன் கூடிய சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பணி முற்றிலும் முடிவடைந்ததையடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜெ.எஸ். நாயுடு அண்மையில் மின்மயமாக்கல் பணிகளைப் பார்வையிட்டு, மின்சார என்ஜின்களால் இயக்கப்படும் பயணிகள் ரயில் போக்குவரத்தைத் தொடங்கலாம் எனச் சான்று வழங்கினார்.

  ஆனால், திருச்சி முடுக்குப்பட்டி துணை மின் நிலையப் பணிகள் முடிவடைந்து செயல்பாடு தொடங்கிய நிலையில், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால் மின்சார ரயில் இயக்கப்படுவதில் தாமதம் நிலவியது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையை ரயில்வே நிர்வாகம் முழுவதுமாகச் செலுத்திவிட்ட போதிலும், மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இதற்கிடையே, முடுக்குப்பட்டி துணை மின் நிலையத்துக்கு மின் இணைப்பு கொண்டு வரும் பாதையில் உள்ள தூண்களுக்கிடையே ஏறத்தாழ 600 மரங்கள் இருப்பதால் மின் விநியோகம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது.

  தூண்களுக்கு இடையேயான பாதையில் உள்ள மரங்களை முற்றிலுமாக வெட்டி அகற்றுவதற்குப் பதில், மரத்தின் கிளைகளை மட்டும் வெட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் அண்மையில் தொடங்கிவிட்டன.

  இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியது:

  "ரயில்வே நிர்வாகம் தரப்பில் பணி முடிந்துவிட்டது என்றே கூறலாம். முடுக்குப்பட்டி துணை மின் நிலையத்துக்கு இன்னும் 10 நாள்களுக்குள் மின் இணைப்பு வந்துவிடும். பின்னர், தொடக்க விழாவுக்கான தேதி அறிவிப்பு மட்டுமே ரயில்வே அமைச்சகத்தில் இருந்து வர வேண்டும். இந்தப் பணி தொடங்கி மூன்றாண்டுகள் ஆகிவிட்டதால், விரைவில் மின்சார என்ஜின் பொருத்திய ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் மாத இறுதிக்குள் ரயில்களை இயக்க அதிக வாய்ப்பு உள்ளது' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.