தூத்துக்குடியில் மாதம் இருமுறை குடிநீர் விநியோகம்! மக்கள் தவிப்பு
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மாதம் இருமுறை குடிநீர் விநியோகம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மாதம் இருமுறை குடிநீர் விநியோகம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்கான குடிநீர் தேவைக்கு தாமிரவருணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து குழாய் அமைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதியின் விரிவாக்கத்தை கருத்தில் கொண்டும், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும் ரூ. 282 கோடி மதிப்பிலான நான்காவது குடிநீர்க் குழாய் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
குளறுபடி: ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடைபெற்ற அந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு நான்காவது குடிநீர்க் குழாய் திட்டம் தொடங்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், வாரம் ஒருமுறை அல்லது 5 நாள்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கோடை காலத்தில் குடிநீர் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்பட்டது. ஆனால், தற்போது நிலைமை மிகவும் மோசமான சூழலை எட்டியுள்ளது என்று கூறும் அளவுக்கு குடிநீர் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தற்போது 15 நாள்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் என்ற அறிவிப்புக்குப் பதிலாக மாதத்துக்கு இரண்டு முறை என்ற அளவுக்கு குடிநீர் விநியோகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ஆட்சியரிடம் மனு, மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை என்ற நிலையில் போராட்டம் தினமும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
ஜூலை 27இல் ஆர்ப்பாட்டம்: இந்தப் பிரச்னை குறித்து நகராட்சி முன்னாள் தலைவரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலருமான இரா. ஹென்றி தாமஸ் கூறியது: தூத்துக்குடி மாநகாரட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் மக்களுக்கு சரியாக குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. சொத்துவரி, குடிநீர் வரி, துப்புரவு பணிக்கான வரி ஆகியவை அதிகளவு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததை கண்டித்து ஜூலை 27 ஆம் தேதி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
குறைபாடுகள் சரி செய்யப்படும்: குடிநீர் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் சில குறைபாடுகள் இருந்தன. அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் பாபநாசம் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை குறித்து மாநகராட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன் கூறியது: தண்ணீர் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.
அணைகளிலிருந்து கூடுதல் நீர்: இதற்கிடையே, குடிநீர் பிரச்னை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் வீ. ப. ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன் தெரிவித்தார்.
மேலும், பாபநாசம் அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் பெறுவது போன்று மணிமுத்தாறு அணையில் இருந்தும் 300 கனஅடி தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளேன். விரைவில் குடிநீர் பிரச்னை முடிவுக்கு வரும் என்றார்.
பாபநாசம் அணையில் தற்போது 62 அடி தண்ணீர் உள்ளது. விநாடிக்கு 800 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மணிமுத்தாறு அணையில் 50 அடி தண்ணீர் உள்ளது. எனவே, குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்து இரண்டு அணைகளில் இருந்தும் விநாடிக்கு தலா 300 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் மட்டுமன்றி மாவட்டம் முழுவதும் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய கவனம் செலுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...