ரூ. 47 கோடியில் 4 அடுக்கு மாடிகளுடன் மேம்படுத்தப்படுகிறது தூத்துக்குடி பேருந்து நிலையம்!
ரூ. 47 கோடியில் பல்வேறு வசதிகளைக் கொண்ட 4 மாடிகளுடன் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுகிறது.


ரூ. 47 கோடியில் பல்வேறு வசதிகளைக் கொண்ட 4 மாடிகளுடன் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. கோவில்பட்டி, விளாத்திகுளம், மதுரை, சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மற்ற பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
புதிய பேருந்து நிலையத்துக்கும், பழைய பேருந்து நிலையத்துக்கும் இடையே அடிக்கடி நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் 1957 இல் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1962 மற்றும் 64 ஆம் ஆண்டுகளில் இரண்டு தொகுதிகளாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனால், பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே பழுதுகள் ஏற்பட்டன. பேருந்து நிலையம் கட்டப்பட்டு ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால் பேருந்து நிலையத்தை புதுப்பித்து கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.
1.53 ஏக்கர் பரப்பளவில் 7 பேருந்து நிறுத்த வழித்தடங்களுடன், அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகள் 987 நடைவீதமும், சிற்றுந்துகள் 280 நடைவீதமும் என மொத்தம் நாளொன்றுக்கு 1267 நடை பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பேருந்துகள் நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, பழைய பேருந்து நிலையத்தை பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ரூ 47.66 கோடி மதிப்பீட்டில் 4 மாடி கட்டடங்களுடன் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் விடப்பட்டு பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பழைய பேருந்து நிலையத்தில் தற்போது கடை வைத்துள்ளவர்கள் தங்களுக்கு மீண்டும் கடை ஒதுக்க வேண்டும் என்றும் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக கடைகளை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் சத்யா லட்சுமணன் கூறியது:
பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி என தற்போது தெரிவித்துள்ளனர். பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் கட்ட குறைந்தது 7 ஏக்கர் நிலம் தேவை. இதுதொடர்பாக மக்களிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை. ஒப்பந்தம் விரைவில் கோரப்பட உள்ள நிலையில் தற்போதுதான் மண் பரிசோதனை நடத்தப்படுகிறது. எனவே, பேருந்து நிலையப் பணிகள் குறித்து வெளிப்படையாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியது: பழைய பேருந்து நிலையத்தின் இடப் பற்றாகுறை காரணமாக அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான பணிமனையை இணைத்து 3.36 ஏக்கர் பரப்பளவில் புதிய பொலிவுடன் தரைதளத்தில் வெளியூர் மற்றும் சிற்றுந்துகள் நிறுத்த ஏதுவாக 31 பேருந்து நிறுத்த வழித்தடங்களுடன் 6 நவீன கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளன.
மேலும், பேருந்துகள் இயக்கம் குறித்த விசாரணை மையம், பேருந்துகள் முன்பதிவு மையம், காவல் கட்டுப்பாட்டு அறை, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு தனி அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை, சுகாதார அலுவலர் அறை, தானியங்கி பணம் பெறும் இயந்திரம் மற்றும் மருந்து கடை ஆகியன கட்டப்பட உள்ளன.
கூடுதலாக பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் தங்குவதற்கு 60 இருக்கைகளுடன் கூடிய குளிர்சாதான அறை ஒன்றும், 131 இருக்கைகளுடன் கூடிய சாதாரண அறை ஒன்றும் நிறுவப்பட உள்ளன. இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள், பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல ஏதுவாக தனியாக இரண்டு பிக்அப் பாயின்ட் அமைக்கப்பட உள்ளது.
வாகன நிறுத்துமிட வசதியுடன் ஒவ்வொரு தளத்திலும் ஏறத்தாழ 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்குசக்கர வாகனம் நிறுத்த ஏதுவாக அமைக்கப்பட உள்ளன.
மேலும் பொதுமக்கள் முதல் தளம், 2 ஆவது, 3 ஆவது மற்றும் 4 ஆவது தளத்திற்கு செல்ல ஏதுவாக ஒவ்வொரு தளத்திலும் 2 எண்ணம் மின்தூக்கி (லிப்ட்) அமைக்கப்பட உள்ளது.
பணிகள் அனைத்தும் முடிவு பெற்ற பிறகு பழைய பேருந்து நிலையம் புதுப்பொலிவு பெற்று மிடுக்கான தோற்றத்துடன், நவீன முறையில் மாநகரப்பகுதி பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கும் என்றார் அவர்.
நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் மகிழ்ச்சியில் மாநகர மக்கள் இருந்தாலும் பணிகள் விரைவில் தொடங்கி நிறைவு பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...