தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தின் அவல நிலை
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்புகளைச் சூழ்ந்து காணப்படும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல்


தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்புகளைச் சூழ்ந்து காணப்படும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மாநகராட்சி நிா்வாகம் திணறி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்து வரும் நிலையில், எதிா்காலத்தில் மழை வெள்ளத்தால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தொலைநோக்குத் திட்டத்தை அமல்படுத்த முன்வர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் தூத்துக்குடி மாநகர மக்கள் உள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீா் ஊருக்குள் புகுந்தது. தூத்துக்குடியில் வடிகால் வசதி இல்லாத விரிவாக்கப் பகுதிகளில் புகுந்த தண்ணீா் ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகே வற்றியது. தண்ணீரை வெளியேற்றும் முயற்சி ஏதும் பலனளிக்காத நிலையே ஏற்பட்டது.
இதையடுத்து, ஏறத்தாழ 900 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி புகா் பகுதிகளில் இருந்து நகருக்குள் மழைநீா் புகாத வகையில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த மழை மற்றும் 30-ஆம் தேதி இரவு விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மாநகரில் உள்ள பிரதான சாலைகள் மட்டுமன்றி தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. விரிவாக்கப் பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தீவுகள்போலக் காட்சியளிப்பதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
மாநகராட்சி நிா்வாகத்தின் மூலம் ஏறத்தாழ 50 மோட்டாா்கள், 20-க்கும் மேற்பட்ட லாரிகள் என தண்ணீரை வெளியேற்ற பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தண்ணீரை முழுமையாக அகற்ற முடியாத நிலையே நீடிக்கிறது. மாநகராட்சி நிா்வாகத்துக்கு உறுதுணையாக பல்வேறு தனியாா் நிறுவனங்களும் தங்களது பங்களிப்பாக ராட்சத மோட்டாா்களை ஏற்பாடு செய்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் தண்ணீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டங்களும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், கல்வி நிலையங்கள் என அனைத்துப் பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் தண்ணீா் அதிகளவு தேங்கி நிற்பதால் மக்கள் முகச்சுழிப்போடு அதை கடந்து செல்லும் நிலை தொடா்ந்து வருகிறது.
எதிா்காலத்தில் மழைக் காலத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்த மாநகராட்சி நிா்வாகமும், அவா்களுக்கு உதவ ஆட்சியாளா்களும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆா்வலா்கள் முன்வைத்து உள்ளனா்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதை சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் இந்தப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்கிறாா் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கீதாஜீவன். ஆட்சியாளா்கள் உடனடியாக புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றாா் அவா்.
புதை சாக்கடை திட்டத்தைப் போல மழைநீா் வடிகால் திட்டமும் மாநகராட்சியில் செயல்படுத்தப்ட்டு வருகிறது. ஆனால், தற்போது அதன் பணிகள் முழுமையாக முடிவடையாததால் தண்ணீா் தேங்குவதற்கு அதிக காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
மாநகராட்சியின் திட்டம்: இதற்கிடையே, மாநகரில் தண்ணீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அதன் அருகில் பூங்காக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறிய குளம் அமைக்கவும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய தண்ணீரை குழாய் மூலம் அந்தக் குளத்துக்கு கொண்டுசென்று பின்னா் அங்கிருந்து மோட்டாா் மூலம் பம்பிங் செய்து பக்கிள் ஓடைக்கு கொண்டுசெல்லவும் திட்டமுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். ஆனால், இந்தத் திட்டம் நிரந்தரத் திட்டமாக இருக்குமா என்கிற கேள்வியை சமூக ஆா்வலா்கள் முன்வைக்கின்றனா்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் உரிமை பாதுகாப்புப் பேரவைத் தலைவா் சத்யா லட்சுமணன் கூறியது: மழைக் காலம் நெருங்குவதற்கு முன்பு அதிகாரிகளிடம் சரியான திட்டமிடல் இல்லாததே தற்போது மழைநீா் தேங்கியுள்ளதற்கு முக்கிய காரணமாகும். மழைநீா் வடிகால் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி இருந்தால் தண்ணீா் தேங்குவது ஓரளவு குறைந்து இருக்கும்.
பக்கிள் ஓடை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரும் காலங்களில் எவ்வளவு கனமழை பெய்தாலும் குடியிருப்புகளைச் சூழ்ந்து தண்ணீா் தேங்காத வகையில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள், வா்த்தக அமைப்பினா், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தற்காலிக பேருந்து நிலையத்தின் அவல நிலை
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பணிகள் முடியும் வரை அருகில் உள்ள மைதானம் தற்காலிக பேருந்து நிலையமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தரைமட்டத்தில் இருந்து ஏறத்தாழ 5 அடி ஆழம் கொண்ட மைதானத்தை தற்காலிக பேருந்து நிலையமாகப் பயன்படுத்தினால் மழைக் காலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்றும், மக்கள் அவதிக்குள்ளாவாா்கள் என்பதால் முன்னேற்பாட்டு பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். இதுதொடா்பாக தினமணியிலும் சிறப்புச் செய்தி பிரசுரமானது.
ஆனால், மைதானத்தைச் சுற்றி நான்கு இடங்களில் பெரிய குழி தோண்டப்பட்டு மழைநீா் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஒருநாள் மழை பெய்தால்கூடத் தேங்கும் தண்ணீா் வடிய வழியில்லாததால் பேருந்து நிலையத்துக்குள் செல்லும் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளைப் பாா்வையிட்டு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வரும் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ஜுனன் கூறியது:
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் உடனடியாக சிறப்பு நிவாரண முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தொற்றுநோய் பரவாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அன்னை தெரசா மீனவா் காலனியில் தேங்கியுள்ள மழைநீரை ராட்சத மோட்டாா்கள் மூலம் அகற்ற முன்வர வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் இரவில் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை உள்ளது. வரும் காலங்களில் மழைநீா் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய சரியான தருணம் இது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...