தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மத்திய ஆய்வுக் குழுவினர் உண்மையான வறட்சிப் பகுதிகளைப் பார்க்காமல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள பகுதிகளில் மட்டும் ஆய்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசின் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். மத்திய வேளாண்மைத் துறையின் அங்கமான சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரவேஷ் சர்மா தலைமையிலான இக்குழுவில் மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் இடம்பெற்றிருந்தனர். மேலும், மாநில அரசின் உயர் அதிகாரிகளும் இக்குழுவினருடன் நேரடியாகச் சென்று பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை தாமிரவருணி ஆற்றுப்பாசனப் பகுதிகளில் அதிக விவசாயம் நடைபெற்றபோதிலும், அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் குழுவுக்கு எந்தவித தகவலையும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஏனென்றால், தூத்துக்குடியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாலசமுத்திரம், ஜெகவீரபாண்டியபுரம், எப்போதும்வென்றான், கீழஈரால், மேலஈரால் ஆகிய பகுதிகளை மட்டுமே பார்வையிட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு பகல் 11.30 மணிக்குள் முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு இடத்திலும் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மேலஈரால் பகுதியில் மட்டும் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். வேறு எந்தப் பகுதியிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
வறட்சிக்கு தொடர்பு இல்லாத தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், புதுவாழ்வுத் திட்டத்திலும் நடைபெறும் பணிகளையும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைத்த பணியையும் மத்திய குழுவினரிடம் காண்பித்தது ஏமாற்றம் அளிப்பதாக விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், மத்தியக் குழுவினரின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டு, விவசாய சங்கப் பிரதிநிதிகள் யாரும் அவர்களை சந்தித்துவிடாமல் இருக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்ததாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.பி. பெருமாள் தெரிவித்தார்.
இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கூறியதாவது: தாமிரவருணி ஆற்றுப்பாசனப் பகுதிகளில் பெரிய அளவில் வறட்சிப் பாதிப்பு இல்லை என்பதால், அந்தப் பகுதிக்கு குழுவினரை அழைத்துச் செல்லவில்லை. மேலும், போதிய நேரம் இல்லாததும் இதற்கு ஒரு காரணம்.
ஏற்கெனவே, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ. 104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் நிதியும் அடங்கும். இந்த நிவாரணத்தொகை இன்னும் பத்து நாள்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிடும் என்றார்.