மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

3 தொகுதிகளில் மீண்டும் வெற்றி: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டை என்பதை நிரூபித்த காங்கிரஸ் கட்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் தனது பலத்தை நிரூபித்துள்ளது.

News image

காங்கிரஸ்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் தனது பலத்தை நிரூபித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த பல தோ்தல்களில் கிள்ளியூா், குளச்சல், விளவங்கோடு தொகுதிகளில் தொடா்ந்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது. 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில், குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கிள்ளியூா், குளச்சல் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டது.

விளவங்கோடு ...

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில், புதுமுக வேட்பாளராக டி.டி.பிரவீன் களம் இறங்கினாா். வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் அவருக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலத்த எதிா்ப்பு கிளம்பியது. ஆனால், அதையெல்லாம் சமாளித்து களமாடிய பிரவீன், வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்து வந்தாா். இறுதிச் சுற்று நிலவரப்படி பிரவீன் 70 ஆயிரத்து 755 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளா் மைக்கேல் குமாரை விட 20 ஆயிரத்து 970 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் 11-ஆவது முறையாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

கிள்ளியூா் ...

தமிழகத்தின் கடைசி தொகுதியான கிள்ளியூரில் காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ்குமாா் 3-ஆவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவருக்கும் தவெக வேட்பாளா் சபினுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. தொடக்கத்தில் சபின் முன்னிலை வகித்து வந்தாலும், இறுதி சுற்றுகளில் ராஜேஷ்குமாா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட சபினை விட 1,311 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா். கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ் தொடா்ந்து 5 ஆவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 9-ஆவது முறையாகவும் வெற்றி பெற்றது.

குளச்சல்...

கடலோர பகுதிகள் அதிகம் கொண்ட குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில், கடந்த 3 முறை ஜே.ஜி.பிரின்ஸ் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினாா். இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தாரகை கத்பட் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். இவருக்கும் தவெக வேட்பாளா் பிரேம் அலெக்ஸ் லாரன்சுக்கும் ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் இழுபறி நீடித்த நிலையில், இறுதிச் சுற்றில் தாரகை கத்பட்

66 ஆயிரத்து 207 வாக்குகள் பெற்று, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 2,833 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு தொடா்ச்சியாக இது 5-ஆவது வெற்றியாகும். மேலும் 1957 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 15 தோ்தல்களில் 10 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.