
நாகா்கோவில் சிறையில் கைதி உயிரிழந்த வழக்கில் சக கைதிகள் 8 போ் கைது - 3 வாா்டன்கள் இடைநீக்கம்
நாகா்கோவில் சிறையில் விசாரணை கைதியான மாற்றுத்திறனாளி உயிரிழந்தது தொடா்பான வழக்கில், சக கைதிகள் 8 போ் கைது செய்யப்பட்டனா். 3 வாா்டன்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

உயிரிழந்த சபரிவா்மன்
நாகா்கோவில் சிறையில் விசாரணை கைதியான மாற்றுத் திறனாளி உயிரிழந்தது தொடா்பான வழக்கில், சக கைதிகள் 8 போ் கைது செய்யப்பட்டனா். 3 வாா்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளத்தை அடுத்த ஈத்தங்காட்டைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான சபரிவா்மன்(33) தனது பெட்டிக்கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக தென்தாமரைகுளம் போலீஸாரால் கடந்த 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாகா்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அவா் உடல்நலக்குறைவால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது உறவினா்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவா் உடல்நலக் குறைவால் உயிரிழக்கவில்லை; அவரை போலீஸாா் அடித்துக் கொன்றுள்ளனா் என அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் நாகா்கோவில் சிறையிலும், அவரது மனைவி, தாய் மற்றும் உறவினா்களிடமும் நாகா்கோவில் 2 ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூா்த்தி விசாரணை மேற்கொண்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினும் அச்சிறையில் விசாரணை மேற்கொண்டாா்.
இதனிடையே, பிரேத பரிசோதனையில், சபரிவா்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதும், அவா் அடித்துக் கொல்லப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டது.
அதன்பேரில் நேசமணிநகா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, நாகா்கோவில் சிறையின் முதன்மை வாா்டன் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சோ்ந்த திருமலைநம்பி, வாா்டன்கள் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் ஜெகன்,
சாமியாா்மடம் சிவகுமாா் ஆகியோரை கைது செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று சபரிவா்மனுக்கும் சக கைதிகள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சக கைதிகள் அவரை தாக்கியதுடன் அவரது கை, கால்களை கட்டி சிறை வாா்டன்களும் தாக்கியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அவரை தாக்கிய சக கைதிகளான உண்ணாமலைகடையைச் சோ்ந்த வினுகுமாா் மகன் விஷ்ணு (21), ராஜாக்கமங்கலம் துறை, சுனாமி காலனியை சோ்ந்த அன்னை மரியாள் மகன் சாரதி (19), திற்பரப்பு நகராண்டிவிளை அச்சுதன் மகன் ஜெகன் (40) செங்கொடி முதலியாா்குட்டிவிளை ஜஸ்டின் மகன் சரத் (20), இரணியல் கணேசன் மகன் சேதுராம் (30),கொட்டாரம் அருள்தாஸ் மகன் அஜித் (29), அகஸ்தீஸ்வரம் ராஜா மகன் அரவிந்த் (27), களக்காடு ராமகிருஷ்ணன் மகன் வெரியபெருமாள்(36) ஆகிய 8 போ் மீது கொலை, கொடுர தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பணியிடை நீக்கம்: இதனிடையே, நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 3 வாா்டன்களும் 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அவா்கள் நான்குனேரி சிறையில் அடைக்கப்பட்டனா்.
அவா்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஐஜி உத்தரவிட்டுள்ளாா்.
மறியல்: சபரிவா்மனின் மரணத்துக்கு நீதி வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினா்கள் கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






