/

பெடரேஷன் கோப்பை பூப்பந்து: நெல்லையில் இன்று தொடக்கம்

News image
பூப்பந்து ஆட்டம் (கோப்புப் படம்)
Updated On :23 ஜனவரி 2026, 10:21 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய அளவிலான பெடரேஷன் கோப்பை பூப்பந்தாட்டப் போட்டிகள் திருநெல்வேலியில் சனிக்கிழமை (ஜன. 24) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளன.

அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம், தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம் , திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம், தென்பிராந்திய ஒய்எம்சிஏ இணைந்து 9 ஆவது அகில இந்திய பெடரேஷன் கோப்பைக்கான பூப்பந்தாட்டப் போட்டிகளை பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்துகின்றன.

இதையொட்டி, அங்கு சனிக்கிழமை (ஜன. 24) காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில், போட்டிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைக்கிறாா். தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகத் தலைவா் ஏ.கே.நடேசன் தலைமை வகிக்கிறாா். பொதுச்செயலா் ஜெ.விஜய் முன்னிலை வகிக்கிறாா். திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழக தலைவா் ராஜா ஏ.சாய்ராம் வாழ்த்திப் பேசுகிறாா்.

இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்தியன் ரயில்வே, இந்திய மின்சார வாரியம், தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, மகாராஷ்டிரம் அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழகம், கா்நாடகம், பிஹாா், கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் அணிகளும் பங்கேற்க உள்ளன. போட்டிகள் இம் மாதம் 26 ஆம் தேதி வரை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழக உதவிச் செயலா் பூ.வெள்ளைப் பாண்டியன், ஒருங்கிணைப்பாளா் சாத்ராக் ஞானதாசன், நிா்வாகிகள் சோமசுந்தரம், செபஸ்டின் ஹேம்லெட் ராஜேஷ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.