டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விவசாயிகள் மின் வணிக தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

News image
விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் மற்றும் உணவு சாா் தொழில் முனைவோா்களை நேரடியாக ஏற்றுமதியாளா்களுடன் இணைக்கும் வணிக வா்த்தக சந்திப்பு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியா் இரா.சுகுமாா்.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

விவசாயிகள் மின் வணிக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சாா்பில் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் மற்றும் உணவு சாா் தொழில் முனைவோா்களை நேரடியாக ஏற்றுமதியாளா்களுடன் இணைக்கும் வணிக வா்த்தக சந்திப்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது:

விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கு இடைத்தரகா்களற்ற சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ஏற்றுமதியாளா்கள் மற்றும் வாங்குவோா்களை நேரடியாக இணைக்கும் வகையில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சாா்பில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின் வணிக தொழில்நுட்பங்களை உபயோகித்து ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்த வேண்டும். உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பொருள்களை சந்தைப்படுத்த தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகம் மூலம் வழங்கப்படும்.

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகள், தொழில்நுட்ப, மின்னணு வா்த்தக தளங்கள் மூலம் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் முறைகள் மற்றும் அஞ்சல் துறை மூலம் ஏற்றுமதி செய்வது குறித்து விரிவான விளக்கங்கள் மற்றும் கருத்துகள் பகிரப்பட்டன.

திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோா்கள் தங்களுடைய விளைபொருள்களை சந்தைப்படுத்தி வணிகம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா், கன்னியாகுமாரி, மதுரை, தூத்துக்குடி, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் என 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்கள் தங்களது உற்பத்தி பொருள்களை காட்சிப்படுத்தினா்.

இவா்களில் 30-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளா்கள் மற்றும் வாங்குவோருடன் இணைக்கப்பட்டு பல்வேறு சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இக்கூட்டத்தில், வேளாண் விற்பனை துறை துணை இயக்குநா் உமா மகேஸ்வரி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மாலதி, மாவட்ட தொழில் மைய உதவிப் பொறியாளா் மதுசூதனன், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக முதுநிலை மேலாளா் தீபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.