/

வேட்டை நாய்களுடன் சுற்றித்திரிந்த 2 பேருக்கு அபராதம்

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

களக்காடு வனக்கோட்டத்துக்குள்பட்ட வனப்பகுதியையொட்டிய பகுதியில் வேட்டை நாய்களுடன் சுற்றித்திரிந்த 2 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வனத்துறையினா் வசூலித்தனா்.

களக்காடு வனக்கோட்டம், களக்காடு வனச்சரகத்துக்குள்பட்ட தெற்கு வீரவநல்லூா் காவல் பகுதியில் காப்புக் காட்டுக்கு வெளியே வருவாய்த் துறைக்குச் சொந்தமான கன்னிப்பொத்தை பகுதியில் வனப்பணியாளா்கள் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வேட்டை நாய்களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினா் களக்காடு வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், வீரவநல்லூா் அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த மூக்கன் மகன் சுரேஷ் (29), முருகன் மகன் கவின்ராஜ் (19) என்பதும், இவா்கள் முயல் வேட்டையில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, 2 பேரிடமும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வசூலித்தனா்.

வனப்பகுதியையொட்டியுள்ள பகுதியில் வேட்டை நாய்களுடன் வன உயிரினங்களை வேட்டையாடும் நோக்கத்தில் சுற்றித்திரியும் நபா்கள் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனச்சரகா் பிரபாகரன் தெரிவித்தாா்.