ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைவதில் சிக்கல்
தூத்துக்குடி, ஜூன் 29: தொழில் நகரமான தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கனவான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு


தூத்துக்குடி, ஜூன் 29: தொழில் நகரமான தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கனவான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு இருப்பதால் குழப்பம் நீடிக்கிறது.
சென்னை, மதுரை, திருநெல்வேலியைத் தொடர்ந்து தொழில் நகரமான தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வேண்டுகோள்.
பொதுமக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின்போது பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடியில் உள்ள உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசிய முதல்வர், ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகளும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி துறைமுக புறவழிச்சாலையில் உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைப்பது என முடிவு செய்தனர்.
இதற்காக, அந்தப் பகுதியில் குத்தகை அடிப்படையில் நீண்ட நாள்களாக இருந்த உப்பளங்கள் அகற்றப்பட்டன. ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மற்றும் ஆயுதப்படை அலுவலகக் கட்டடம் அமைக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
மேலும், 29-12-2011-ல் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தின்போது ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் (எண். 14) நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பஸ் நிலையம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்வதற்காக ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது.
16-5-2012-ல் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டதன் அடிப்படையில் தில்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் தில்லியைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு திட்ட மதிப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக வெள்ளிக்கிழமை (ஜூன் 29) நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் (எண். 6) கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் (திமுக) கோட்டுராஜா, திமுக கொறடா சுரேஷ்குமார், காங்கிரஸ் கொறடா சந்திரபோஸ் ஆகியோர் தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் கொடுத்தனர். ஏற்கெனவே செயல்பட்டுவரும் புதிய, பழைய பஸ் நிலையம் மட்டும் மக்களுக்குப் போதுமானது, ஒருங்கிணைந்த நிலையம் தேவையில்லை என அவர்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர் சசிகலா புஷ்பா, மக்களின் எண்ணங்களுக்கு மரியாதை அளிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, தூத்துக்குடி மாநகராட்சியிலும் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தேவையில்லை என்று கூறுகிறார்க்ள. இதுகுறித்து கவுன்சிலர்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்புங்கள். அதிகாரிகள் அறிக்கை அனுப்புங்கள் என்றார். மேயரின் இந்த அறிவிப்பை திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வரவேற்றனர். ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் மௌனம் காத்தனர்.
முதல்வரின் தேர்தல் பிரசார அறிவிப்பைத் தொடர்ந்து தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம அமைப்பது தொடர்பாக 29.12.2011-ல் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தற்போது எப்படி எதிராக முதல்வருக்கு மனு அனுப்புவது என்று தெரியாத குழப்பத்தில் அவர்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...