/

நெல்லை சுந்தரனார் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா நடத்துவதில் சிக்கல் நீடிப்பு!

திருநெல்வேலி, டிச. 29: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  பட்டமளிப்பு விழா நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் மாணவர்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர். திருநெல்வேலி, தூத்துக

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:01 pm

தி. இன்பராஜ்

திருநெல்வேலி, டிச. 29: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  பட்டமளிப்பு விழா நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் மாணவர்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ,  மாணவிகளின் வசதிக்காக தொடங்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரனார்  பல்கலைக்கழகம் மூலம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் நடைபெறும் வகுப்புகள் மூலம் ஏறத்தாழ 800 பேரும்,  தொலைநெறி வகுப்புகள் மூலம் பி.எட். படிக்கும் 500 பேரும், பல்கலைக்கழக  உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் 1,100 பேரும் இதில் அடங்குவர். இவர்கள் தவிர, நாடு முழுவதும் உள்ள தேசிய ஒருங்கிணைப்பு மையங்கள் மூலம்  25,000-க்கும் மேற்பட்டோர் பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். இவர்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு ஆண்டுதோறும்  அக்டோபர் மாத இறுதியில் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.

2010-11 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை பட்டங்கள்  வழங்கப்படவில்லை. தாற்காலிகமாக வழங்கப்பட்ட பட்டமும் 6 மாதம் நிறைவடைந்துவிட்டதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த 8 மாதமாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால் பட்டமளிப்பு விழா  நடத்துவதில் தாமதம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவ,  மாணவிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாற்றுவழியில் பட்டமளிப்பு விழாவை  நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது.

பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர், இணைவேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர்  ஆகியோரை வைத்து ஜனவரி 5-ம் தேதி பட்டமளிப்பு விழாவை நடத்த முடிவு  செய்யப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் நேரடியாக பயின்ற 800 மாணவ, மாணவிகளுக்கு விழாவில்  பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தீவிரமாக செய்து வந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள்  நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதால்,  பட்டமளிப்பு விழாவை நடத்த முடியாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது திணறி வருகிறது.

புதிய கட்டடங்கள் கட்டியது, பணி நியமனம், பி.எட் மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸôர் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெரும்பாலான ஆவணங்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôரின்  கைவசம் இருப்பதால், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இசைவு தெரிவித்திருந்த ஆளுநரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் விழாவில் கலந்துகொள்ள முடியாது என  மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணை முடியும்வரை பட்டமளிப்பு விழாவை நடத்த முடியாது என  பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். மேலும், பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக பதிவாளரிடம் விசாரணை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பிரச்னை குறித்து பெயர் வெளியிட விரும்பாத பல்கலைக்கழக ஆட்சிமன்றக்  குழு உறுப்பினர் ஒருவர் கூறியது: "சுந்தரனார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் பல்வேறு  பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார்கள் குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது.

சுந்தரனார் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும்வரை பட்டமளிப்பு விழா நடத்த சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவில் அரசு தரப்பில் யாரும்  இதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே, பட்டமளிப்பு விழா நடைபெற இன்னும்  சில மாதங்கள் வரை ஆகலாம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.