/

வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் டிவி நிறுவனம்!

திருநெல்வேலி, ஜன. 17: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் போதிய கவனம்  செலுத்தாததால், உள்ளூர் சேனல்கள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழகம்

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:52 pm

தி. இன்பராஜ்

திருநெல்வேலி, ஜன. 17: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் போதிய கவனம்  செலுத்தாததால், உள்ளூர் சேனல்கள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் எந்தவித வரைமுறையும் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த ஏறத்தாழ 500 உள்ளூர் தொலைக்காட்சிகளை அரசு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மூடியது.

மேலும், தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி மாதம் ரூ.70 மட்டுமே கேபிள் கட்டணம்  வசூலிக்கப்படும் என்பதை நிலைநிறுத்தும் வகையில், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஆபரேட்டர்களின் ஆதரவு குறைந்த அளவே இருந்தபோதிலும்,  தற்போது 80 சதவிகித ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவியில் இணைந்துள்ளனர்.  கட்டணச் சேனல்கள் உள்பட 90-க்கும் மேற்பட்ட சேனல்கள் தற்போது அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பாகி வருகின்றன.

மாதம் ரூ.150 முதல் ரூ.200 வரை கேபிள் கட்டணம் செலுத்தி வந்த மக்கள்,  தற்போது ரூ.70 மட்டுமே செலுத்துவதால் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சில  இடங்களில் கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது.

கட்டணச் சேனல்களை கருத்தில்கொண்டு ஓர் இணைப்புக்கு ரூ.20 (வரிகள் தவிர்த்து)  அரசுக்கும், ரூ.50 ஆபரேட்டர்களுக்கும் கிடைக்கும்.

மேலும், மூடப்பட்ட உள்ளூர் சேனல்களை வரைமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது.  

இதையடுத்து, உள்ளூர் தொலைக்காட்சிகள் நடத்த விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஒப்பந்த மனுக்கள் பெறப்பட்டு, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் கடந்த 29.11.2011-ல் ஒப்பந்தம் பிரிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரைப் பொறுத்தவரை மாதம் ரூ.3.21 லட்சம் (வரிகள் தவிர்த்து)  என்ற தொகை செலுத்த வேண்டும் என உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மாநகரில் 10 சேனல்களுக்கு இதே  கட்டணத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல, மாவட்டம் முழுவதும் வட்டம் வாரியாக தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு சேனல் மாவட்டம் முழுவதும் தெரிய வேண்டுமானால் ஏறத்தாழ ரூ.5 லட்சம் வரை மாதந்தோறும் அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மட்டும் அரசுக்கு மாதம் ரூ.50  லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்த முறை  இன்னும் அமலுக்கு வரவில்லை.

இதேபோல, நாகர்கோவிலில் மட்டும் உள்ளூர் சேனல் நடத்த ரூ.8 லட்சம் வரை  ஏலம் கோரப்பட்டது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் ரூ.2.21 லட்சம்  கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

மாநிலம் முழுவதும் மாநகரப் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சிகள் நடத்த விருப்பம் தெரிவித்தவர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒருவாரத்தில் சேனல்  நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்துக்கு குறைந்தது ரூ.50 லட்சம் என வைத்துக் கொண்டாலும் மாநிலம்  முழுவதும் ஏறத்தாழ ரூ.15 கோடி வரை அரசுக்கு மாதந்தோறும் வருவாய் கிடைக்க  வாய்ப்பு உள்ளது.

ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கான பணத்தை செலுத்தக் கோரி இதுவரை ஒப்பந்தம் பெறப்பட்டவர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு இரண்டு மாதத்தில் ஏறத்தாழ ரூ.30 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெயர் கூற விரும்பாத அரசு கேபிள் டிவி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வருவாய் இழப்புக்கு சிலர் துணைபோவதாகப் புகார் எழுந்துள்ளது. உள்ளூர்  தொலைக்காட்சி நடத்த ஒப்பந்தம் பெற்றவர்களிடம் இன்னும் குறைவான தொகைக்கு அனுமதி பெற்றுத் தருவதாகவும், மறு ஒப்பந்தம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று  வருவதாகவும் சில அரசியல் பிரமுகர்கள் கூறி வருகிறார்களாம்.

மேலும், ஏலத்தில் கலந்துகொண்டு அனுமதி பெற்ற உள்ளூர் சேனல்களைத் தவிர,  எந்தவித அனுமதியும் பெறாமல் சில சேனல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.

இதுதொடர்பாகவும் உரிய நடவடிக்கை இல்லை.

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவோரை  கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அரசு கூடுதல்  கவனம் செலுத்தினால் மேலும் வருவாயை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.