குழப்பத்தில் காங்கிரஸ், தேமுதிக
திருநெல்வேலி, செப். 22: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற பிரதான கட்சிகளான காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் சார்ப


திருநெல்வேலி, செப். 22: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற பிரதான கட்சிகளான காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பமான சூழல் நீடித்து வருகிறது.
1996-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்ட உமா மகேஸ்வரி வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
2001-ம் ஆண்டு நடைபெற்ற மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த எஸ். ஜெயராணி வெற்றி பெற்றார்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் என்ற அடிப்படையில் 2006-ம் ஆண்டு பொதுப் பிரிவுக்காக மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இருப்பினும், மேயர் இந்த முறை மாமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திமுகவை சேர்ந்த அ.லெ. சுப்பிரமணியன் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், 2011-ம் ஆண்டுக்கான தேர்தலில் மேயர் பதவி பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளராக அக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளராக எஸ். அமுதா வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார். இவர், திமுக தலைமை தணிக்கைக் குழு உறுப்பினரும், பாளையங்கோட்டை மண்டலத் தலைவருமான சுப. சீத்தாராமானின் மகள் ஆவார்.
மதிமுக வேட்பாளராக மகேஸ்வரி நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், மாநகர் மாவட்ட மதிமுக இலக்கிய அணி புரவலர் டி.எம். நடராஜனின் மனைவி ஆவார்.
முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டி என்று முடிவாகிவிட்ட நிலையில், காங்கிரஸ், தேமுதிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
பொதுப் பிரிவு பெண்களுக்கு மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது பெரும்பாலான அரசியல் கட்சியினருக்கு வியாழக்கிழமை காலையில்தான் தெரியவந்தது.
சில கட்சிகளில் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டிவந்ததால் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பமான சூழ்நிலை நீடித்து வருகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் ஜூலியட்?: காங்கிரஸ் கட்சி சார்பில் மேயர் பதவிக்கு ஒரு பெண் உள்பட மூன்று பேர் மட்டுமே போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமையிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால், போட்டியிட விருப்பம் தெரிவித்த கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச் செயலர் ஜூலியட் பிரேமலதா வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநகர் மாவட்டத் தலைவர் சுந்தரராஜபெருமாள், மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு, மக்களவை முன்னாள் உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகிய மூவரும் இவரை தேர்வு செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கட்சியின் தலைமை ஒப்புதல் அளித்தபிறகே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என மாநகர் மாவட்டத் தலைவர் சுந்தரராஜபெருமாள் தெரிவித்தார்.
தேமுதிக வேட்பாளர் சீதாலட்சுமி?: தேமுதிக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களில், மாவட்ட வர்த்தக அணிச் செயலர் பி. ஆனந்தமணியின் மனைவி சீதாலட்சுமி மட்டுமே பெண். எனவே, அவரே வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாத சூழல் இருந்து வரும் நிலையில், தனித்துப் போட்டி என முடிவாகிவிட்டால் தேமுதிக வேட்பாளராக சீதாலட்சுமியே அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.
இதுதவிர, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் மேயர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...