பாதுகாப்பு போதுமா?
திருநெல்வேலி, நவ. 13: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இடிந்தகரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள். அணுமின


திருநெல்வேலி, நவ. 13: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இடிந்தகரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்.
அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பதும், அணுஉலையில் இருந்து வெளியாகும் கதிரியக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என்பதும் போராட்டக் குழுவினரின் வாதங்களில் முக்கியமானவை.
ஆனால், போதுமான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது; சுனாமி ஏற்பட்டால்கூட அணுஉலைகளில் பாதிப்பு ஏற்படாது என அணுசக்தித் துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி கூடங்குளம் சென்று நேரில் ஆய்வு செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், "கூடங்குளம் அணுஉலைகள் உலக அளவில் மிகவும் பாதுகாப்பானவை; பயந்தால் வரலாறு படைக்க முடியாது' என தெரிவித்தார்.
மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவினரும், கடந்த 8-ம் தேதி கூடங்குளத்துக்குச் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 15-ம் தேதி முதல் மூன்று நாள்கள் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ஆய்வுகள் தொடரும்.. ஆலோசனைகள் தொடரும்.. போராட்டமும் தொடரும்... என்ற நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இப்போது பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அணுஉலைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிப்பதில் அணுமின் நிலைய நிர்வாகம் இப்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
இதுவரை மெüனம் காத்துவந்த அணுமின் நிலைய நிர்வாகத்தினர் இப்போது அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் அணுஉலை பாதுகாப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு சனிக்கிழமை நேரடியாக விளக்கம் அளித்தனர்.
முதலில், அணுஉலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள 220 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும், டீசலில் இயங்கும் ஜெனரேட்டர் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அணுமின் நிலையத்தில் மின்சாரம் தடைபட்டால் உலையைச் சுற்றி தேவையான குளிர்ச்சியை ஏற்படுத்த இந்த ஜெனரேட்டர் உதவுமாம். மொத்தம் நான்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை இந்த ஜெனரேட்டர்கள் செயல் இழக்கும்பட்சத்தில், உலகிலேயே முதன்மையான அதிநவீன பாதுகாப்பு அம்சமான "இயல்பு நிலை குளிர்விப்பான் அமைப்பும்' அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 140 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப வசதியின் செயல்திறன் வெப்பநீர் சோதனை ஓட்டத்தின்போது உறுதி செய்யப்பட்டதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.
அதாவது, முற்றிலும் மின்தடை ஏற்பட்டுவிட்டால் உடனடியாக தானியங்கி வசதியுடன் அணுஉலையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துளைகளில் இருந்து காற்று உள்ளே இழுக்கப்பட்டு, உடனடியாக நீராவியாக மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீராவியாக மாற்றப்படும் காற்று உள்ளே குளிர்விக்கப்பட்டு அணு
உலைக்குத் தேவையான குளிர்ந்த நீராக மாறுவதுடன், மீண்டும் நீராவியாக வெளியேறும் வசதி அனைத்தும் தானியங்கி மூலம் இயக்கப்படுகிறது.
அணுமின் நிலைய கடற்கரையைச் சுற்றி கடல்மட்டத்தில் இருந்து 26 அடி உயரத்துக்கு மிகப் பலம் வாய்ந்த பாதுகாப்பு அரண் கட்டப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் கட்டடங்களும் கடல்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்குமேல் கட்டப்பட்டுள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவித்தனர். இதனால், சுனாமி ஏற்பட்டாலும் அணுஉலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் பொறியாளர்கள்.
அணுஉலை பாதுகாப்புக் கருவிகள் அனைத்தும் முழுமையாக இயங்க 6.3 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக நான்கு வழிகளில் இந்த மின்சாரத்தை பெற்றுள்ளதாகவும், திருநெல்வேலி அபிஷேகப்பட்டி, நாகர்கோவில் செண்பகராமன்புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து நேரடியாக மின்சாரம் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அணு உலையில் ஒருமுறை யுரேனியத்தை நிரப்பிவிட்டால் 11 மாதங்களுக்கு எந்த பராமரிப்பும் செய்ய வேண்டிய தேவையில்லை. பின்னர், ஒருமாதம் மேற்கொள்ளப்படும் பராமரிப்பின்போது அணுஉலையில் உள்ள 163 உருளைகளில் 54 உருளைகளில் உள்ள யுரேனியக் கழிவை மட்டும் வெளியேற்றிவிட்டு நிரப்பினால் போதுமானதாகும்.
வெளியேற்றப்படும் அணுக் கழிவை பாதுகாப்பாக வைக்கும் வகையில் அணு உலையில் ஒரு பகுதியில் தாதுப் பொருள்கள் நீக்கப்பட்ட, நியூட்ரான்கள் அளவை உள்இழுத்து குறைக்கச் செய்யும் போரிக் அமிலம் கலக்கப்பட்ட (போரான்) தண்ணீர் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியில் ஏறத்தாழ 8 ஆண்டுகள் இந்தக் கழிவுகளை பாதுகாக்க முடியும் என்றும், கதிரியக்கம் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், அணுஉலையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், கருவிகள் முதலியவை ரஷிய நாட்டைச் சேர்ந்தது என பொறியாளர்கள் கூறினர். மொத்தத்தில், "தேவைக்கு அதிகமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. உலக அளவில் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய
அணு உலைகள் அமைக்கப்பட் டுள்ளன' என்பது பொறியாளர்கள் கருத்து.
இருப்பினும், இயற்கையின் சீற்றத்தால் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் யாரால் தடுக்க முடியும்? பொறுப்பேற்பதுதான் யார் என்ற கேள்விகளுக்கு மட்டும் பதில் கூற ஆளில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...