/

குற்றாலத்தில் தங்கும் விடுதிகள், படகு குழாம் புதுப்பொவு பெறுமா?

தென்காசி,ஜூலை 10: குற்றாலத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த படகு குழாமும் புதிய பொலிவுடன் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:08 pm

பா.​ பிரகாஷ்

தென்காசி,ஜூலை 10: குற்றாலத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த படகு குழாமும் புதிய பொலிவுடன் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுப் பெற்றுள்ளது.

தென்னகத்தின் ஸ்பா, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் இரண்டு முறை சீசன் களைகட்டும். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான சீசன் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சீசன் என இரண்டு சீசன் காலங்களிலும் சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வந்து செல்வர்.

சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் தங்குவதற்கு நட்சத்திர தங்கும் விடுதிகள் முதல் சிறிய அளவிலான தங்கும் விடுதிகள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இவைதவிர பேரருவி பகுதியில் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்குச் சொந்தமான 38 சிற்றில்களும் (காட்டேஜ்), தென்காசி சாலையில் தங்கும் விடுதியில் சிற்றில்கள் மற்றும் தங்கும் விடுதிகள் 15-ம், பேருந்து நிலையப் பகுதியில் 7 தங்கும் விடுதிகளும், மல்லிகை தங்கும் விடுதியில் 20 அறைகளும், சத்திரம் தங்கும் விடுதியில் 21 அறைகளும், அருவி இல்லத்தில் 8 ஹால்களும், ரோஜா தங்கும் விடுதியில் 24 தங்கும் அறைகளும் உள்ளன.

இவைதவிர செங்கோட்டை சாலை தங்கும் விடுதி தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. பேரூராட்சி தங்கும் விடுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வாடகை தனியார் தங்கும் விடுதிகளை விட மிகவும் குறைவாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கும் விடுதிகளின் மூலம் மொத்தமாகக் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.18 லட்சமாகும்.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கும் விடுதிகளைப் பராமரிக்கவும், தாற்காலிகப் பணிகள் மேற்கொள்ளவும் செலவிடப்பட்ட தொகை ரூ.35 லட்சமாகும். இதுதவிர மின் கட்டணம், ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சில தங்கும் விடுதிகளைத் தவிர, பெரும்பாலான தங்கும் விடுதிகளில், அறைகள் பாதுகாப்பற்றதாகவும், சுத்தமில்லாமலும்,போதிய வசதிகளின்றியும் உள்ளன.

மெத்தைகள், தலையணைகள் மோசமான நிலையிலும், அறைக்குள் செல்ல முடியாத அளவில் துர்நாற்றமும் வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தங்குவதற்கு தயங்குகின்றனர்.

தென்காசி சாலை தங்கும் விடுதியை இடித்து புதிய கட்டடங்கள் கட்டவும், அனைத்து தங்கும் விடுதிகளிலும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் 2008-ம் ஆண்டில் ரூ. 1.91 கோடி மதிப்பீட்டில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனாலும் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தங்கும் விடுதிகளைப் பராமரிப்பதன் மூலம் பயணிகள் குறைந்த வாடகையில் பயன்பெற முடியும் என சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

புத்துயிர் பெறுமா படகு குழாம்:

குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிகள், குற்றாலநாதர் கோயில் இவைதவிர பொழுதுபோக்குவதற்கு என உள்ள ஒரே இடம் குற்றாலம்- ஐந்தருவி சாலையில் உள்ள படகு குழாம் மட்டும்தான். இந்த படகு குழாமில் கடந்த ஆண்டு ரூ.54 லட்சம் செலவில், குழாமின் கரையைப் பலப்படுத்தி, நடைபாதை, பூங்கா, மின்விளக்கு வசதி, குழந்தைகளைக் கவரும் வகையில் சிலைகள் போன்றவை அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

ஆனால், அதற்கு முன்பாக செயல்பட்டு வந்த படகு குழாம் இப்போது பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தென்காசி-குற்றாலம் செல்லும் சாலையில் குற்றாலத்தில் ஹோட்டல் தமிழ்நாடு கிளை அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் பின்புறம் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான பாசுபதனேரி குளம் உள்ளது.

இந்த குளத்தின் மூலம் 40.21ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த குளத்தின் நீளம் சுமார் 1 கிலோ மீட்டராகும். தென்காசி-குற்றாலம் செல்லும் சாலையிலிருந்து, குற்றாலம்-பழைய குற்றாலம் செல்லும் சாலை வரை இக்குளம் அமைந்துள்ளது.

இக்குளத்துக்கு புலியருவியில் இருந்து தண்ணீர் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த குளத்தில் படகு குழாம் செயல்பட்டு வந்தது. இப்போது இங்கு படகு குழாம் செயல்படவில்லை.

இக்குளத்தைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்தி, குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையைச் சீரமைத்து படகு குழாமை செயல்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

எனவே, இக்குளத்தைச் சீரமைப்பதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பயனடைவார்கள். முதன்முதலாக செயல்பட்டு வந்த இந்த படகு குழாமை செயல்படுத்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் பொழுதுபோக்குவதற்கு கூடுதலாக ஒரு படகு குழாம் அமையும் என சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.