/

"அரசியல் விளையாட்டு': விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம்!

திருநெல்வேலி, ஜன. 10: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் "அரசியல் விளையாட்டு'களால் விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மணிமுத்தாறு அணையில் இரு

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:05 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, ஜன. 10: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் "அரசியல் விளையாட்டு'களால் விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 மணிமுத்தாறு அணையில் இருந்து இந்த ஆண்டு முதல் இரண்டு "ரீச்' குளங்களுக்கே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற விதிமுறையை மீறி 3,4-வது "ரீச்' குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதே இதற்கு காரணம்.

 மணிமுத்தாறு அணையின் பிரதான கால்வாய்ப் பாசனத்தில் அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய நான்கு "ரீச்'களிலும் மொத்தம் 350 மானாவாரி குளங்களும், அவற்றின் கீழ் சுமார் 25,322 ஏக்கர் பாசன நிலங்ளும் உள்ளன. நான்கு "ரீச்'களிலும் உள்ள விவசாயிகளிடையே தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க "முறைப் பாசனம்' பின்பற்றப்பட்டு வருகிறது.

 அதன்படி, 1,2-வது "ரீச்'களுக்கு ஒரு ஆண்டும், 3,4-வது "ரீச்'களுக்கு அடுத்த ஆண்டும் முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 110 அடிக்கு மேல் தண்ணீர் பெருகினால் அந்த ஆண்டில் நான்கு "ரீச்'களுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டு 1,2-வது "ரீச்' குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய முறையாகும்.

 இந்த ஆண்டு இம் மாவட்டத்தில் இயல்பான மழை அளவான 814.80 மி.மீட்டரை விட கூடுதலாக 7.20 மி.மீ. (822 மி.மீ.) மழை பெய்திருந்தாலும் வட கிழக்குப் பருவ மழை காலத்தில் பெரும்பாலான மானாவாரி குளங்கள் நிரம்பவில்லை. மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 1,2-வது "ரீச்' குளங்களுக்கு டிசம்பர் 9-ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது முதல் இரண்டு "ரீச்'களிலும் உள்ள 174 குளங்களும் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. சுமார் 20 குளங்களுக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. இந்த இரண்டு ரீச்களிலும் மொத்தம் 11,291 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.

 தண்ணீர் திறக்கக் கோரிக்கை: இந்நிலையில், 3,4-வது "ரீச்'சில் உள்ள 14,031 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 176 குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நான்குனேரி தொகுதி காங்கிரஸ்

எம்.எல்.ஏ. வசந்தகுமார் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.

 வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில் மணிமுத்தாறு அணை அதிகபட்சம் 98 அடி வரை மட்டுமே நிரம்பியது. முதல் இரண்டு "ரீச்'களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது பிசானப் பருவ சாகுபடிக்காக மார்ச் 31-வரை தண்ணீர் அளிக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் உறுதி அளித்துள்ளனர். அணையில் திங்கள்கிழமை நிலவரப்படி 93 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இப்போதைய அணையின் நீர்மட்டத்தைக் கருத்தில் கொண்டால் முதல் இரண்டு "ரீச்'களுக்கும் உறுதியளித்தபடி மார்ச் இறுதிவரைக்கூட தண்ணீர் கொடுக்க இயலாது. அவ்வாறு கொடுக்க வேண்டுமானால் இன்னும் 110 மில்லியன் கன அடி தண்ணீர் தேவை. அடுத்து மழை பெய்தால் மட்டுமே முதல் இரண்டு "ரீச்'களிலும் உள்ள பிசானப் பருவ சாகுபடி நெல் பயிரைக் காப்பற்ற முடியும் என்கின்றனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

 இந்த சூழ்நிலையில், 3,4-வது "ரீச்' குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அரசியல்வாதிகள் அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் நிர்பந்தம் செய்வது, நான்கு "ரீச்'களையும் பாதிக்கச் செய்யும் என்பது விவசாயிகளின் கருத்து.

அரசியல்வாதிகளின் நிர்பந்தத்துக்குப் பணிந்து அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கடைசி இரண்டு "ரீச்'களுக்கும் தண்ணீரைத் திறந்து விட்டால் முதல் இரண்டு "ரீச்'களுக்கும் இப்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி, கடைசி இரண்டு "ரீச்'களுக்கும் முழுமையாக தண்ணீர் கொடுக்க இயலாது. ஆக, மொத்தத்தில் நான்கு ரீச்களிலும் பிசானப் பருவ சாகுபடி பாதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

  ""முதல் இரண்டு "ரீச்'களின் தேவைக்கும் அதிகமாக அணையில் தண்ணீர் இருக்கிறது என அதிகாரிகள் கருதினால் கடைசி இரண்டு "ரீச்'களுக்கும் தண்ணீர் கொடுப்பதில் தவறில்லை'' என்கிறார் மணிமுத்தாறு பிரதான கால்வாய்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி. வேல்துரை எம்.எல்.ஏ.

 தேர்தல் ஆதாய முயற்சி?: நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நான்குனேரி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசியல்வாதிகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2003 ஆம் ஆண்டு சாத்தான்குளம் இடைத்தேர்தலின்போது இப்படித்தான் பிரதான குளங்கள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த நிலையில் சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும் பலன் இல்லை. அதேபோல், இப்போதும் வாக்கு

வங்கியையே கருத்தில் கொண்டு, உண்மை நிலையைக் கருத்தில்கொள்ளாமல் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் "விளையாட்டு' ஒட்டுமொத்தமாக நான்கு "ரீச்'களிலும் பிசானப் பயிர்களைப்

பாதிக்கச் செய்துவிடக் கூடாது. அரசு இதை, தலையாயப் பிரச்னையாகக் கருதி,

தக்க நடவடிக்கையைத் தாமதமின்றி மேற்கொள்ளவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.