/

"அம்பேத்கர்' திரைப்படத்தை திரையிடுவதில் சிக்கல்!

திருநெல்வேலி, ஜன. 1: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்' திரைப்படத்தை திருநெல்வேலியில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  சாதிய ஆதிக்கம்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:59 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, ஜன. 1: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்' திரைப்படத்தை திருநெல்வேலியில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 சாதிய ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் இம் மாவட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையிட்டால் அசம்பாவிதங்கள் நிகழலாம் எனக் கருதி எந்த திரையரங்கு உரிமையாளரும் படத்தை திரையிட இ துவரையில் முன்வரவில்லை.

 சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் 1998-ம் ஆண்டு ஆங்கில மொழியில் "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்தது. வழக்கமாக, தேசியத் தலைவர்களின் இத்தகைய வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பின்னர் மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் திரையிடப்படுவது வழக்கம்.

 அதன்படி 9 மாநில மொழிகளில் இந்த திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. பல்வேறு சமூக அமைப்புகளும், தனிநபர்களும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக நீதிமன்றம் வரை சென்று கடந்த ஆண்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது.

 இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 3-ம் தேதி திரையிடப்பட்டது. எனினும், தென் மாவட்டங்களில் அதிகமான திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை திரையிட எவரும் முன்வரவில்லை. சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களிலும், வட மாவட்டங்களிலும் இந்த திரைப்படம் திரையிடப்பட்ட போதிலும் படம் அவ்வளவாக பேசப்படவில்லை. காந்தி திரைப்படம் திரையிடப்பட்டபோது அதற்கு பொதுமக்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. பள்ளிக் குழந்தைகள் அணி அணியாக சென்று அந்த திரைப்படத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தை மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையிட எந்த திரையரங்க உரிமையாளரும் முன்வரவில்லை.

 இதையறிந்த இங்குள்ள சமூக ஆர்வலர்களும், "தலித்' அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரையரங்க உரிமையாளர்களை சந்தித்து கேட்டபோது "வம்பை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்' என்ற ரீதியில் அவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 சாதிய ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் இம் மாவட்டத்தில் அடிக்கடி சாதிக் கலவரங்கள் நடந்த காலங்கள் உண்டு. 1995-96ல் தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சாதிய கலவரம் தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது. அப்போது இம் மாவட்டத்தின் இரண்டு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல உயிர்கள் பழிவாங்கப்பட்டன.

 அதற்கு காரணம், மாவட்டத்தின் மேற்கு ஓரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான்.

 அந்த தாக்கம் இன்னமும் மாவட்டத்தை விட்டு மறையவில்லை போலிருக்கிறது. இப்போது "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்' திரைப்படத்தை திரையிட்டால் அசம்பாவிதங்கள் நிகழலாம் என திரையரங்க உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்.

 ""அம்பேத்கர், ஒரு தேசிய தலைவர் என்ற நிலையையும் மீறி அவர் இன்னும் ஒரு சாதிய தலைவராக பார்க்கப்படும் போக்குதான் இருக்கிறது. அதனால்தான் அந்த திரைபடத்தை திரையிட்டால் திரையரங்குகளில் அசம்பாவிதங்கள் நிகழலாம் எனக் கருதி எவரும் திரையிட முன்வருவதில்லை'' என்கிறார் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்.

 தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுடன் அவர் சந்தித்த பல்வேறு சமூக சிக்கல்கள் உள்ளிட்ட முக்கியமான வரலாற்று தகவல்கள் திரைப்படத்தில் உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 சாதாரணமாக, ஒரு நடிகரின் திரைப்படத்தை திரையிட்டாலே ரசிகர்களின் கட்டுக்கடங்காத ஆர்வம், உணர்ச்சி வயப்படுதல் போன்றவற்றால் சில சமயம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இத்தகைய திரைப்படங்களை திரையிட்டால் அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று கருதிதான் திரையிட தயக்கம் காட்டுகிறோம் என்றார் ஒரு திரையரங்கு உரிமையாளர்.

 இத்தகைய சமூக சிக்கல்களால் ஒரு தேசியத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள பயன்படும் திரைப்படத்தை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

 இப்பிரச்னைக்கு தீர்வுகாண இப்போது தலித் மற்றும் தலித் அல்லாத சுமார் 30 சமூக அமைப்புகளை கொண்ட "தாமிரபரணி பண்பாட்டு அரங்கம்' ஒன்று உருவாக்கப்பட்டுளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினரான பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் உள்ளிட்டோரைக் கொண்ட இந்த குழுவினர் இந்த திரைப்படத்தை திருநெல்வேலியில் திரையிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக சில திரையரங்க உரிமையாளர்களை அணுகி அவர்களுக்கு போதிய பாதுகாப்பும், ஒத்துழைப்பும் தருவதாக கூறி வருகின்றனர்.

 இந்த திரைப்படத்தை பொதுமக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் அதன் கதாநாயகரான நடிகர் மம்மூட்டியையும் இங்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக "யாதுமாகி' திரைப்பட கள நிர்வாகி லேனா குமார் தெரிவித்தார். இவர்களது முயற்சி வெற்றி பெற்றால் மட்டுமே "அம்பேத்கரை' திருநெல்வேலி மக்கள் திரையில் காண முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.