/

வனத்துறை நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் இல்லை

திருநெல்வேலி, ஜூன் 9: சுற்றுச்சூழலைப்  பாதுகாக்க விரும்பி மரங்களை நட விரும்புவோருக்கு அரசு நாற்றங்கால்களில் இலவச மரக்கன்றுகள் கிடைப்பதில்லை.  அரசு நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் இருப்பு இல்லாததால் தனிய

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:14 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, ஜூன் 9: சுற்றுச்சூழலைப்  பாதுகாக்க விரும்பி மரங்களை நட விரும்புவோருக்கு அரசு நாற்றங்கால்களில் இலவச மரக்கன்றுகள் கிடைப்பதில்லை.

 அரசு நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் இருப்பு இல்லாததால் தனியார் நாற்றங்கால்களில் அதிகமான விலைக்கு மரக்கன்றுகளை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 ஓசோன் படலத்தில் ஓட்டை, உலகம் வெப்பமயமாதல், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என நாள்தோறும் இயற்கை  ஆர்வலர்களின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இயற்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன.

 இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளில் ஒன்று, வனவளத்தைப் பாதுகாக்க வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மரங்களை நட வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அவரவர் பங்கை ஆற்ற வேண்டும் என்று  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 இயற்கையைப் பாதுகாக்க விரும்புவோர் வாய்ப்பு

கிடைக்கும்போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள், வழிபாட்டு இடங்கள், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட அரசும் ஊக்கமளித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க சுற்றுச்சூழல் துறை சார்பில் பள்ளி ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

 அரசியல் கட்சியினரும் தங்கள் பங்கிற்கு தலைவர்கள் பிறந்த நாள்களில் உருப்படியான காரியமாக பொது இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மரம் நடுவதற்கு அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மரக்கன்றுகள் கிடைக்காத சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.

 வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நாற்றங்கால்களில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து மாவட்ட வன அலுவலரின் மேற்பார்வையில் அவை  தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதற்கு மரக்கன்றுகள் இல்லை.

"கடந்த 2008 ஆம் ஆண்டு வரை வனத்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு தேவைப்படுவோருக்கு அவை இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டில் அவ்வாறு மரக்கன்றுகள் வளர்க்க நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை. எனவே, மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படவில்லை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் இருப்பு இல்லை.'' என்றார் வனத்துறை அதிகாரி ஒருவர்.

 இதை உறுதி செய்யும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாணான்குளம், சங்கரன்கோவில், வீரவநல்லூர், பொன்னாக்குடி, திம்மராஜபுரம், கொக்கிரகுளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் இருப்பு இல்லை. கொக்கிரகுளத்தில் அரசு நாற்றங்காலில் தனியார் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு மரக்கன்று ரூ. 10 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

 பாளையங்கோட்டையில் அண்மையில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் 58-வது பிறந்த நாளையொட்டி கே.டி.சி. நகர் பகுதியில் 580 மரக்கன்றுகள் நடுதலை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடக்கி வைத்தனர். அந்த விழாவில் பேசிய அவர்கள் முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்தநாளையொட்டி மாநகர் பகுதியில் 870 மரக்கன்றுகளை நட உறுதி பூண்டனர். அதற்காக திமுகவினர் இப்போது மரக்கன்றுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் எங்கும் மரக்கன்றுகள் இருப்பு இல்லை என வனத்துறையினரும் கைவிரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மரங்களை வளர்க்க விரும்புவோருக்கு மரக்கன்றுகளையும், அதை வளர்ப்பதற்கான மானியத்தையும் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்காக ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்கு பருவ மழை காலமான செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். அதற்காக ஜூன் அல்லது ஜூலையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும். அந்த திட்டத்தின் கீழ் வழங்குவதற்கான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யத்தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே தவிர, இலவசமாக வழங்குவதற்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என வனத்துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

 திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு தனியார் நிலங்களில் மரம் வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 3 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 எனவே, வட கிழக்குப் பருவ மழை காலத்தில் காலி இடங்களில் மரங்களை நட விரும்புவோருக்கு மரக்கன்றுகள் இலவசமாக கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.