அரசியல் ஆட்டத்தில் ஆதாயம் பெற்ற நெல்லை
திருநெல்வேலி, ஜூன் 2: மாநிலங்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் அரசியல் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் நன்றாகவே ஆதாயம் பெற்றுள்ளது என்றால் அது மிகையில்லை. நாடாளுமன்றத்தில் இம்மாவட்டத்திற்கு திரா


திருநெல்வேலி, ஜூன் 2: மாநிலங்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் அரசியல் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் நன்றாகவே ஆதாயம் பெற்றுள்ளது என்றால் அது மிகையில்லை.
நாடாளுமன்றத்தில் இம்மாவட்டத்திற்கு திராவிடக் கட்சிகளின் சார்பிலான பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த நிலையில், தற்போது மாநிலங்களவை மூலம் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டத்தின் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் 4 ஆக உயர்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில் தற்போது 11 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 6 தொகுதிகள் திமுக வசமும், 3 தொகுதிகள் காங்கிரஸ் வசமும், அதிமுக, மதிமுக வசம் தலா 1 தொகுதியும் உள்ளன.
2009 மக்களவைத் தேர்தலில் இம் மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலியும், அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தென்காசியும் கிடைத்தது. இதன் மூலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான சட்டப் பேரவைத் தொகுதிகள் திமுக வசம் இருந்தாலும் மக்களவை உறுப்பினர் இல்லாமல் இருந்தது அக்கட்சியினருக்கு பெரும் மனக்குறையாகவே இருந்து வந்தது.
தொகுதி மறுவரையறைக்கு பின்பு சட்டப் பேரவைத் தொகுதிகள் 10 ஆக குறைந்துள்ளது. மக்களவைத் தொகுதிகள் இரண்டும் அப்படியே உள்ளன.
இந்நிலையில், மாநிலங்களைத் தேர்தல் அறிவிப்பு வெளியான உடன், அதில் இம் மாவட்டத்திற்கு திமுக சார்பில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என அக்கட்சியினர் நம்பிக் கொண்டிருந்தனர். அதை உறுதி செய்யும் வகையில், முன்னாள் அமைச்சரான சங்கரன்கோவில் தங்கவேலு பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் "தலித்' சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
மக்களவையில் உள்ள திமுக உறுப்பினர்கள் 18 பேரில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த "தலித்' எவரும் இல்லை. வைகோவின் மதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் சேர்ந்த தங்கவேலுவை கெüரவப்படுத்த திமுக தலைமை அவ்வப்போது வாய்ப்புகளை வழங்கியது.
2006 சட்டப் பேரவைத் தேர்தலில் சங்கரன்கோவிலில் போட்டியிட்ட தங்கவேலு வெற்றி பெற்றால் அமைச்சர் ஆவார் என கூறப்பட்டது. ஆனால், அவர் தோல்வி அடைந்தார். அதை ஈடுகட்டும் வகையில் மாநிலங்களவைக்கு தங்கவேலு பெயர் முதலாவதாக "டிக்' அடிக்கப்பட்டதாக திமுகவினர் கூறுகின்றனர்.
சங்கரன்கோவில் என்றாலே அது திமுகவின் எதிரி வைகோவின் கோட்டை என்ற எண்ணத்தை உடைக்கவும், சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ள அதிமுகவைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான சொ. கருப்பசாமியிடமிருந்து தொகுதியை கைப்பற்றவும் திமுக வகுத்துள்ள வியூகம் இது.
இதற்காகவே, வரும் ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சங்கரன்கோவிலுக்கு செல்கிறார் என்பது கூடுதல் தகவல். இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை விழச் செய்துள்ளது திமுக என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட திமுகவில் சட்டப் பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் பலம் வாய்ந்த இரண்டு கோஷ்டிகள். அதில் எதிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருவரிடமும் நட்போடு வலம் வருபவர் தங்கவேலு என்பது அவரது கூடுதல் பலம் என்றும் கட்சியினர் கூறுகின்றனர்.
அதிமுகவிலும் நெல்லைக்கு வாய்ப்பு: திமுக மட்டுமின்றி இப்போது அதிமுகவும் தனது இரண்டு உறுப்பினர் வாய்ப்புகளில் ஒன்றை திருநெல்வேலிக்கு அளித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது அதிமுக. அப்போது கைவிடப்பட்ட பிரதிநிதித்துவத்தை இப்போது மாநிலங்களவை மூலம் இம் மாவட்டத்திற்கு ஈடு செய்துள்ளது அதிமுக.
அதிமுகவில், இம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஜெயலலிதா பேரவை மாநில செயலரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அவர், சிறிது காலம் கட்சியில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார். பின்னர் தலைமையின் கடைக்கண் பார்வைபட்டு ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அவருக்குத்தான் கிடைக்கும் என்ற பேச்சு எழுந்தது.
இப்போது, உள்ளூரில் அவரது அரசியல் எதிரியான பி.எச்.பாண்டியனின் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வும்., ஜெயலலிதாவின் வழக்குகளை கையாண்டு வருபவருமான பி.எச். பால் மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களை சோர்வடையச் செய்துள்ள நிலையில், அவரது எதிர்கோஷ்டியான திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் பாப்புலர் முத்தையா தரப்பை உற்சாகப்படுத்தியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மனோஜ் பாண்டியனின் தாயார் சிந்தியா பாண்டியன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதை ஈடுகட்டும் வகையிலும், தென் மாவட்டங்களில் வாக்குவங்கி பலம் உள்ள "தலித்' சமுதாயத்தை திருப்திபடுத்த திமுகவின் தங்கவேலு பிரதிநிதித்துவம் உதவும் என்றால், மற்றொரு பலம் வாய்ந்த நாடார் சமூகத்தை திருப்திபடுத்த மனோஜ் பாண்டியன் பிரதிநிதித்துவம் அதிமுகவுக்கு உதவும் எனக் கருதி அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே மாவட்டத்திற்கு 4 எம்.பி.க்கள்: திராவிட கட்சிகளின் இந்த அரசியல் காய் நகர்த்துதல் மூலம் இம் மாவட்டத்தின் எம்.பி.க்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இது நல்லதொரு வாய்ப்பு. தொழில் வளத்தில் பின்தங்கியுள்ள இந்த மாவட்டத்தின் தேவைகள் அதிகம். தேசிய மற்றும் திராவிட கட்சிகளின் பிரதிநிதிகள் நான்கு பேரும் மாவட்ட மக்களின் தேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...