திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்தது நெல்லையப்பர் கோயிலில் கழிவுநீர் குட்டையாகும் தெப்பக்குளங்கள்

திருநெல்வேலி,ஜூலை 6: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயிலில் தெப்பங்களுக்கு  தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்துபோயும், பல இடங்கள் ஆக்கிரமிப்பில்  இருப்பதாலும் சுமார் 20 ஆண்டுகளாக தண்ணீர் உள்வரத்து தடைப

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:36 pm

கே.வாசுதேவன்

திருநெல்வேலி,ஜூலை 6: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயிலில் தெப்பங்களுக்கு  தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்துபோயும், பல இடங்கள் ஆக்கிரமிப்பில்  இருப்பதாலும் சுமார் 20 ஆண்டுகளாக தண்ணீர் உள்வரத்து தடைபட்டுள்ளது. இதனால் கோயிலில் உள்ள தெப்பகுளங்கள் கழிவுநீர் குட்டைகளாக மாறி வருகின்றன.

 தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயிலுக்கு மற்ற கோயில்களுக்கு இல்லாத பல தனிச்சிறப்புகளும் புகழும் உண்டு. வேறு எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில் 3  தெப்பக்குளங்கள் இங்கு உள்ளன.

 இவற்றில் உள்தெப்பங்களாக கருமாறி தீர்த்த தெப்பக்குளமும், பொற்றாமரைக்குளமும்  உள்ளன. வெளித்தெப்பம் சுவாமி நெல்லையப்பர் சாலையில் உள்ளது. இத் தெப்பக்குளத்துக்கு நகரம் நயினார்குளத்துக்கு செல்லும் கால்வாயில் தனியாக ஒரு கால்வாய் அமைக்கப்பட்டு, அதிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

 பொற்றாமரைக்குளம் அமைக்கப்படும்போதே இந்தக் கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரியாக இருந்த வேங்கிடகிருஷ்ண முதலியாரால் இந்தக் கால்வாயும், பொற்றாமரைக்குளமும் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக கோயில்  தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. 1922ஆம் ஆண்டுவாக்கில் கற்பூரப்பணி விடை  சிவசூரிய பரதேசியாரின் முயற்சியால் கால்வாயும், பொற்றாமரைக்குளமும் சீரமைக்கப்பட்டுள்ளது.

 இந்தக் கால்வாய் சுந்தர் தோழர் தெருவில் இருந்து பிரிந்து, தரைக்கு அடியில் உள்ள  கருங்கல்லால் அமைக்கப்பட்ட கால்வாய் மூலம் மேல ரதவீதி, மேல மாடவீதி  வழியாக கோயிலுக்குள் இருக்கும் கருமாறி தீர்த்த குளத்துக்கு வருகிறது.

அந்தக் குளத்தில் இருந்து மற்றொரு கால்வாய் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள கால்வாய்  மூலம் பொற்றாமரை குளத்துக்கு செல்கிறது. அங்கிருந்து

மற்றொரு கால்வாய் மூலம்  கல்லத்தி முடுக்குத் தெரு வழியாக சுவாமி நெல்லையப்பர் சாலையில் உள்ள வெளித்  தெப்பத்துக்கு செல்கிறது.

 இந்தக் கால்வாயில் தண்ணீர் வரத்து இருந்த நேரத்தில், தெப்பக் குளங்கள்  தூய்மையான நீருடன், அழகாக காட்சியளித்தன. மேலும், அப் பகுதியில் வசிக்கும்  மக்களும், தெப்பகுளங்களில் இருந்து தண்ணீர் எடுத்து தங்களது குடிநீர்த் தேவையை  பூர்த்தி செய்ததாக பக்தர் ஒருவர் கூறுகிறார்.

 சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொற்றாமரைக்குளத்தில் இருந்துதான் தினமும்  அபிஷேகம் செய்வதற்கு சுவாமி, அம்பாளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது.  இதேபோல மாசி தெப்பத் திருவிழா, ஆனித் திருவிழா தீர்த்தவாரி, கிரகணங்கள்  மாறும் வேளையில் நடைபெறும் தீர்த்தவாரி ஆகியவை பொற்றாமரைக் குளத்தில்தான்  நடைபெறுகின்றன. தெப்பக்குளங்கள் வற்றாமல் இருப்பதற்கு மூல ஆதாரமாக அக்  கால்வாயே இருந்து வந்தது.

 திருநெல்வேலி நகரத்தில் 1987-ல் பாதாள சாக்கடை திட்டத்துக்காக, ரதவீதிகளிலும், அதைச் சுற்றியுள்ள வீதிகளிலும் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இப் பணியின்போது தரைக்குள் இருந்த கால்வாய் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக மேல ரதவீதி, மேல மாட வீதி, கல்லத்தி முடுக்குத் தெரு ஆகிய பகுதிகளில்  பல இடங்களில் கால்வாய் முற்றிலும் சேதமடைந்தது.

 ஆனால், அப்போது இது குறித்து கோயில் நிர்வாகமோ, இந்து அறநிலையத் துறை  அதிகாரிகளோ அக்கறை எடுத்துக் கொள்ளாததால் கால்வாய் மூலம் தண்ணீர் வருவது  முற்றிலும் நின்றது. கால்வாயைச் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தியும், கோயில்  நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இக் கால்வாய் தடைப்பட்ட நாளில் இருந்து கோயிலின் கழிவுநீர் தொட்டியாக  தெப்பக்குளங்கள் மாறி வருகின்றன. கோயிலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அனைத்து வகை குப்பைகளும் இங்கு கொட்டப்படுகின்றன.

இதில் மிகவும் சிதிலமடைந்து  காணப்பட்ட கருமாறி தீர்த்தகுளம், கோயில் பக்தர்கள் பேரவையின் சார்பில் மிகவும்  சிரமத்துக்கு இடையே சீரமைக்கப்பட்டது.

 இருப்பினும், கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து இல்லாததால், அக் குளம் பழைய  பொலிவை எட்ட முடியாமல் உள்ளது. தெப்பக்குளங்களில் தேங்கி நிற்கும் மழை நீரோடு, கழிவு நீரும் கலப்பதால் சில வேளைகளில் தண்ணீர் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், கோடைக்காலத்தில் தெப்பக்குளங்கள் வற்றிவிடுகின்றன.

 தெப்பகுளங்களின் இந்த நிலைமையால், அங்கிருந்து தினமும் அபிஷேகத்துக்கு  தண்ணீர் எடுப்பது தடைபட்டுள்ளது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து  விக்ரகங்களுக்கும் ஆழ்குழாய் தண்ணீர் மூலமே தற்போது அபிஷேகம் செய்யப்படுகிறது. 20 ஆண்டுகளாக இப் பிரச்னை இருந்தும், கோயில் நிர்வாகம் அக் கால்வாயைச்  சீரமைக்கவோ, அதற்குரிய மாற்று நடவடிக்கையை எடுப்பதற்கோ எண்ணிக்கூட  பார்க்கவில்லை என்பதே மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியாகும்.

 20 ஆண்டுகளாக கால்வாயில் தண்ணீர் வராமல் இருப்பதால், அது பல இடங்களில்  ஆக்கிரமிப்பாளர்களின் பிடிக்குள் சென்றுவிட்டது. சில இடங்களில் இருந்த இடம்  தெரியாமல் தூர்ந்துபோய்விட்டது.

இன்னும் சில ஆண்டுகள் இதே நிலைமை நீடிக்கும்பட்சத்தில் கால்வாய் இருந்ததற்கான ஒன்றிரண்டு அடையாளங்களும் மாயமாகிவிடும் என பக்தர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

 எனவே கோயில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் இவ் விஷயத்தில்  காலம்தாழ்த்தாமல் செயல்பட்டால்தான் தூர்ந்து போய் கொண்டிருக்கும் கால்வாயை  மீட்டெடுக்க முடியும், இல்லையெனில் கோயில் தல வரலாற்றில் மட்டுமே கால்வாயை காண முடியும் என்பது பக்தர்களின் ஆதங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.