/

இலங்கை அகதிகளுக்கு நிரந்தர வீடுகள் திட்டம் கனவா?

திருநெல்வேலி, பிப். 25: தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர  குடியிருப்புகளை அமைப்பதற்கான நிலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அரசின் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ள

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:53 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, பிப். 25: தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர  குடியிருப்புகளை அமைப்பதற்கான நிலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அரசின் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 முகாம்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் தேவையான அளவு புறம்போக்கு நிலம்  இல்லாததால், அகதிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வரும் தன்னார்வ தொண்டு  நிறுவனங்களின் சேவையைக்கூட பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் தற்போது 113 அகதி முகாம்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச்  சேர்ந்த 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அகதி முகாம்கள் அனைத்தும் நல்ல  நிலையில் உள்ளதாகக் கூற முடியாது.

 அகதி முகாம்களின் இந்த பரிதாப நிலையை உணர்ந்த அரசு, அவற்றைச் சீரமைக்க  திட்டமிட்டது. அதற்காக, கடந்த ஆண்டு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் நேரில்  சென்று முகாம்களைப் பார்வையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில், முதல் கட்டமாக கடந்த ஆண்டு ரூ.100 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியில்  தற்போது அனைத்து முகாம்களிலும் ரூ.46 கோடி செலவில் குடிநீர், மின் வசதி, தெருவிளக்கு, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது. எஞ்சியுள்ள ரூ.54 கோடியில் நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுக்க அரசு  திட்டமிட்டு அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

 அரசின் இத் திட்டத்தை நிறைவேற்றுவதில்தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக  தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 இலங்கை அகதிகளுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வரும் தன்னார்வ  தொண்டு நிறுவனங்களுக்கு நிலத்தை கொடுத்து அடிப்படை வசதிகளை அரசு செய்து  கொடுக்கும். வீடுகளை தொண்டு நிறுவனங்கள் கட்டிக் கொடுத்து வருகின்றன.

 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 முகாம்களில் 870 குடும்பங்களைச் சேர்ந்த  2,990 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் நாரணம்மாள்புரம் முகாமை சேர்ந்த

225 குடும்பங்களில் மோசமான வசிப்பிடங்களில் இருந்த 96 குடும்பங்களுக்கு  கங்கைகொண்டானில் அரசு வழங்கிய நிலத்தில் திருநெல்வேலி சமூக சேவை சங்கத்தினர் (டி.எஸ்.எஸ்.எஸ்.) அமெரிக்க நாட்டு நிறுவனத்தின் நிதியுதவியில் வீடுகளை கட்டிக் கொடுத்தனர்.

 அடுத்து, சங்கரன்கோவில் ஆத்தியடி குளத்துக்கரை முகாமில் மோசமான சூழ்நிலையில்  வசித்து வரும் 60 குடும்பங்களுக்கு அந்தப் பகுதியில் வீடு கட்டிக் கொடுக்க முயற்சி  மேற்கொண்டபோது அங்கு நிலம் கிடைக்கவில்லை. பெருமாள்புரம் (சிறைத்துறை  நிலம்), சங்கரன்கோவில் ஆர்.எம்.சி. (ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்),  சமூகரெங்கபுரம் (ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), சுப்பிரமணியபுரம் (மேய்ச்சல் புறம்போக்கு) முகாம்களின் நிலையும் இதுதான். இந்த முகாம்கள் தற்போது இருக்கும்  இடங்கள் அரசுத் துறைகளுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அந்த இடத்தில்  நிரந்தர  வீடுகளைக் கட்டிக் கொடுக்க சம்பந்தப்பட்ட துறைகள் அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 அந்தந்த துறைகளின் எதிர்காலத் தேவைக்கு நிலம் கிடைப்பது உறுதி இல்லை  என்பதால், இப்போது எவரும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. சுப்பிரமணியபுரம் நிலம்  மேய்ச்சல் புறம்போக்கு. அந்த இடத்தைப் பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு ஈடாக  வேறு நிலம் கொடுக்க வேண்டும் என்பது அரசு விதி.

 சங்கரன்கோவில் ஆத்தியடி முகாமில் இடம் இல்லாததால் அந்த திட்டத்தைக்  கைவிட்டு அந்த நிதியை நாரணம்மாள்புரம் முகாமில் வசிக்கும் மேலும் 69  குடும்பங்களுக்கு கங்கைகொண்டானில் வீடு கட்டிக் கொடுக்கும் பணிகளை  டி.எஸ்.எஸ்.எஸ். தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்த இடத்தில் தற்போது  நாரணம்மாள்புரம் முகாமில் எஞ்சியுள்ள 60 குடும்பங்களுக்கு மட்டுமே வீடு கட்ட முடியும். அதற்குமேல் அங்கு இடம் இல்லை.

 தற்போதுள்ள முகாம்களில் வசிப்பவர்களுக்கான நிரந்தர வீடுகளை அந்தந்த  முகாம்களுக்கு அருகிலேயே கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் முகாம்வாசிகளின் கோரிக்கை. இத்தனை நாளைய பழக்க வழக்கம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட காரணங்களால் முகாம்வாசிகள் யாரும் அடுத்த இடங்களுக்குச் செல்ல  தயாரில்லை. ஆனால், முகாம்கள் இருக்கும் இடத்திலேயோ அல்லது அருகிலேயோ  நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுக்க அரசு புறம்போக்கு நிலம் இல்லை.

 மக்கள் வசிக்கும் இடங்களில் இருந்த காலி இடங்களை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்கள் அரசு அறிவித்தபடி 5 ஆண்டுகளாக அந்த இடத்தில்  இருந்திருந்தால் அவர்கள் பட்டா பெற்றிருப்பார்கள். ஊருக்கு வெளியே இருக்கும்  இடமாக இருந்தால், அரசின் 2 ஏக்கர் இலவச நிலம் அளிக்கும் திட்டத்தில் அந்த  நிலமும் பயனாளிக்கு அளிக்கப்பட்டிருக்கும். இதனால், எந்த இடத்திலும் புறம்போக்கு  நிலத்தைக் கண்டுபிடிப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.

 தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்கள் உடனடியாக ஆங்காங்கே இருக்கும் அரசுக்  கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டுமானால், ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 50 வீடுகளை  கட்டினால்கூட 2 ஏக்கர் நிலம் வேண்டும். அப்படி ஒரே இடத்தில் மொத்தமாக புறம்போக்கு நிலம் இல்லாதது அகதிகளுக்கான நிரந்தர வீடு கட்டும் திட்டத்தை  கேள்விக்குறியாக்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.