/

நெல் கொள்முதல் விவசாயிகளிடம் சுரண்டல்

திருநெல்வேலி, பிப். 23: நெற்றி வியர்வை நிலத்தில் விழ, பாடுபட்டு விளைவித்த நெல்லை  விற்பனை செய்யச் செல்லும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மறைமுக சுரண்டல்கள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:51 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, பிப். 23: நெற்றி வியர்வை நிலத்தில் விழ, பாடுபட்டு விளைவித்த நெல்லை  விற்பனை செய்யச் செல்லும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்

விவசாயிகளிடம் மறைமுக சுரண்டல்கள் நடைபெற்று வருகின்றன.

 எடையில் கோளாறு, மூடை இறக்க கட்டாயக் கூலி, ஈரப்பதம் அதிகம் எனக் கூறி  காத்திருக்க வைத்தல் போன்றவற்றால் இந்த மையங்களின் நோக்கமே அடிபட்டுபோகும்  நிலை ஏற்பட்டு வருகிறது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் பிசானப் பருவ நெல் அறுவடை தொடங்கப்பட்டுள்ளாதல் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.   சில இடங்களில் கொள்முதல் மையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார்.

 பிசானப் பருவ அறுவடை தொடங்குவதற்கு முன்பு தனியாரிடம் ஒரு கோட்டை (150 கிலோ) நெல் விலை ரூ. 2,000 ஆக இருந்தது. தற்போது ரூ. 1,150 முதல் ரூ. 1,300 வரை உள்ளது. அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள சன்ன ரக நெல்லுக்கு (100 கிலோ) ரூ. 1,100-ம், பெருவட்டு  நெல்லுக்கு ரூ.1,050-ம் வழங்கப்படுகிறது. இதனால் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்வதைவிட அரசு கொள்முதல் நிலையங்களில் விற்றால் லாபம் என விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால் அந்த மையங்களில் விவசாயிகள் பல வழிகளில்  சுரண்டப்படுகின்றனர்.

 கொள்முதல் மையங்களில் கடந்த ஆண்டு மின்னணு தராசு பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு மேடைத் தராசு பயன்படுத்தப்படுகிறது. இதனால் எடையில் துல்லியம் இல்லை. விவசாயிகள் கொண்டு வரும் நெல் 40 கிலோ மூடைகளாக எடை போடப்படுவதால் ஒவ்வொரு மூடைக்கும் ஓரிரு கிலோ கூடுதலாக செல்ல வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 மையங்களுக்குக் கொண்டு வரப்படும் நெல்லை வாகனங்களில் இருந்து விவசாயிகளே இறக்கி மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு மையத்திலும் இருக்கும் சுமைத் தொழிலாளர்கள்தான் இறக்க வேண்டும் என்றும் அதற்கு ஒவ்வொரு மூட்டைக்கும் (40 கிலோ) ரூ. 8 கூலி கொடுக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனாலும் விவசாயிகளுக்கு செலவு ஏற்படுகிறது.

 இவை மட்டுமின்றி, மையத்திற்குக் கொண்டு வரப்படும் நெல்லில் ஈரப்பதம்  கூடுதலாக இருப்பது சோதனையில் தெரிய வந்தால் நெல் காயும் வரை விவசாயிகள் அங்கே காத்துக்கிடக்க வேண்டியது இருக்கிறது. சிலர் மையத்தின் முன்பு நெல்லை உலரப் போட்டுவிட்டு காத்திருப்பது பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

 இந்த தொந்தரவு எல்லாம் வேண்டாம் என்று கருதிதான் சில விவசாயிகள் அறுவடை களத்திலேயே தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்றுவிடுகின்றனர். அரசின் கொள்முதல் மையங்களால் அவர்களுக்கு பயன் கிடைக்காமல் போய்விடுகிறது.

 ""ஒரு விவசாயியிடம் குறைந்தபட்சம் 300 மூடைகள் நெல் இருந்து அவர்கள்  எங்களுக்கு தகவல் தெரிவித்தால் நாங்களே அங்கே சென்று வாகனங்களில் ஏற்றி வந்துவிடுவோம். மின்னணு தராசைக் கவனமாகக் கையாள வேண்டும்.

இல்லையென்றால் பழுதாகி கொள்முதல் பாதிக்கப்படும் என்பதால் மேடை தராசு  பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொள்முதல் மையங்களில் மூடைகளை இறக்க பணம் கேட்கும் கூலி தொழிலாளர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை'' என்றார் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரி ஒருவர்.

ஆனால் அவர் கூறுவதற்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 ஈரப்பதம் அதிகம் இருக்கும் நெல்லுக்கு அதற்கேற்றபடி விலையைக் குறைத்து  கொள்முதல் செய்தால் விவசாயிகள் வீணாகக் காத்திருக்க வேண்டியது இருக்காது. தஞ்சை மாவட்டத்தில் 22 சதவீத ஈரப்பதம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.

 ""ஞாயிற்றுக்கிழமை 58 மூடை நெல்லைக் கொண்டு வந்தேன். ஈரப்பதம் அதிகமாக  இருப்பதாகக் கூறிவிட்டதால் காத்திருக்கிறேன். எப்போது எடை போட்டு பணம்  தருவார்களோ தெரியாது'' என்றார் முன்னீர்பள்ளம் மையத்தில் செவ்வாய்க்கிழமை நெல் மூடைகளுடன் காத்திருந்த தருவை விவசாயி கிருஷ்ணன்.

 நெல்லில் இருக்கும் பதரை இயந்திரம் மூலம் நீக்கும்போது பதருடன் சிறிதளவு  நெல்லும் சேர்ந்து கழியும். அந்த பதரை விவசாயிகள் அள்ளிச் செல்ல அனுமதி இல்லை என்றும் புகார் கூறப்படுகிறது. ஆனால், விவசாயிகள் விரும்பினால் அள்ளிச் செல்லலாம் என்கிறார் முன்னீர்பள்ளம் மைய பொறுப்பாளர்.

 மையத்தின் இந்த குறைபாடுகள் நீக்கப்பட்டால்தான் விவசாயிகளுக்கு நிம்மதி. உணவு உற்பத்தியில் அவர்களுக்கு ஊக்கம் தொடரும். வருங்காலத்தில் அவர்கள் சேற்றில் கால்வைக்கத் தயங்கினால், நாம் சோற்றில் கை வைப்பது கஷ்டமாகும் நிலை ஏற்படும்.  சிந்தித்து செயல்படவேண்டியது அரசின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.