/

சுந்தரனார் பல்கலை.யில் பலம் பெறும் பொன் முட்டையிடும் வாத்து

திருநெல்வேலி, பிப். 22: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைநெறி தொடர்கல்வியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 3 மடங்கு உயர்ந்து 11 ஆயிரத்தை எட்டி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:51 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, பிப். 22: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைநெறி தொடர்கல்வியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 3 மடங்கு உயர்ந்து 11 ஆயிரத்தை எட்டியுள்ளது.

வரும் கல்வியாண்டின் (2010-2011) இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தி சுமார் 20,000 மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கான தீவிர முயற்சியில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

1990-ல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைநெறி தொடர்கல்வியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர்.

பல்கலைக்கழகங்களின் "பொன் முட்டையிடும் வாத்து' என கூறப்படும் வகையில் வருமானத்தை கொட்டிக் கொடுப்பது இந்த தொலைநெறி தொடர் கல்வி. உயர்கல்விக்கு அரசின் நேரடி மானியம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் சூழ்நிலையில் தொலைநெறி தொடர்கல்வி மூலம் கிடைக்கும் வருமானம் பல்கலைக்கழகங்களுக்கு முக்கியமான ஊட்டமாக உள்ளது. எனவே, பல்கலைக்கழகங்கள் இந்த தொலைநெறி தொடர்கல்வியை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது உண்டு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநெறி தொடர்கல்வியில் சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவிகளும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வருவதாக கூறப்படுகிறது. இதர பல்கலைக்கழகங்களிலும் பல ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் 20 ஆண்டுகள் நிரம்பிய சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வியில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பல்கலைக்கழகத்தின் 6-வது துணைவேந்தராக பொறுப்பேற்ற பேராசிரியர் இரா.தி. சபாபதிமோகன் தொலைநெறி தொடர்கல்வியை மேம்படுத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

மாணவர்கள் எளிதாக சேர்க்கை பெறுவதற்காக நாடு முழுவதும் கூடுதலாக கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தனியார் கல்வி மையங்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் இவற்றில் மாணவர்கள் நேரடியாக சேர்க்கை பெறலாம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் 85 ஆக இருந்த மையங்கள் தற்போது 138 ஆக உயர்ந்துள்ளன.

கல்வி மையங்களுக்கு அளிக்கப்படும் பங்குத் தொகையை வழங்குவதில் முன்பு இருந்து வந்த காலதாமதம் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளதால் அந்த மையங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவது, மைய நிர்வாகிகள் பல்கலைக்கழக நிர்வாகிகளை எளிதில் தொடர்பு கொண்டு பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண்பது, குறிப்பிட்ட காலத்தில் தேர்வு, முடிவுகளை விரைவாக வெளியிடுவது, பாடப் புத்தகங்களை காலத்தே அனுப்புவது போன்றவை மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர வாய்ப்பாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மேலும், நிகழ் கல்வியாண்டு (2009-2010) முதல் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது என்று துணைவேந்தர் அறிவித்தார். இதையடுத்து, மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கல்வியாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

""நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற ஆண்டில் தொலைநெறி தொடர்கல்வியில் தேர்வு எழுதியவர்கள் சுமார் 3,500 மட்டுமே. இந்த ஆண்டு ஜனவரி முடிய சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 11 ஆயிரம் ஆகும்'' என்றார் துணைவேந்தர்.

தேர்வுக் கட்டணம் கிடையாது என்பதால் கிராமப்புற மாணவர்கள் ஆர்வமுடன் தொலைநெறி தொடர்கல்வியில் சேர்ந்து வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வேலைவாய்ப்புக்கேற்ற புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இந்த பல்கலைக்கழகத்தில் உடனடி வேலைவாய்ப்புக்கேற்ற வகையில் 17 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களை பின்பற்றி 9 பட்டய பாடப் பிரிவுகளும், 16 வகையான ஒருங்கிணைந்த தொழில்திறன் மேம்பாட்டு பட்டயப் படிப்புகளும், 12 வகையான ஒருங்கிணைந்த எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்புகளும் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

""வரும் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள பாடங்களுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கூடுதலான கல்வி மையங்களையும் திறக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ள மேலும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்த திட்டங்கள் மூலம் வரும் கல்வியாண்டின் இறுதிக்குள் தொலைநெறி தொடர்கல்வியில் மாணவர் சேர்க்கை 20 ஆயிரத்தை எட்டும் என நம்புகிறோம்'' என்றார் அதன் இயக்குநர் (பொறுப்பு) கா.அ. மணிக்குமார் தெரிவித்தார்.

""மாணவர் சேர்க்கை அதிகரிப்பதன் மூலம் வருமானம் ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 7 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும், ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் தொலைநெறிக் கல்வியில் வருமானத்தைக் குறிக்கோளாக கொள்ளாமல் விளிம்புநிலையினருக்கும் கல்வி வாய்ப்பை அளிப்பதே பிரதான நோக்கம்'' என்றார் சபாபதி மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.