நெல்லையப்பர் கோயிலில் ஒளிராத ஒலி-ஒளி காட்சி
திருநெல்வேலி, பிப். 2: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ரூ.1 கோடியில் ஒளி-ஒலி காட்சி அமைக்கத் திட்டமிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்குரிய அடிப்படைப் பணிகள்கூட தொடங்


திருநெல்வேலி, பிப். 2: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ரூ.1 கோடியில் ஒளி-ஒலி காட்சி அமைக்கத் திட்டமிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்குரிய அடிப்படைப் பணிகள்கூட தொடங்காமல் இருப்பது பக்தர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும். இக் கோயிலில் 2003 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்துக்கு பின்னர், பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கோயிலில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்பாள் சன்னதி அருகே உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஓவியக் கண்காட்சி திறக்கப்பட்டது.
நின்றசீர் நெடுமாற பாண்டிய மன்னால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபம், 1000 தூண்களுடன் 520 அடி நீளமும், 63 அடி அகலமும் கொண்டது ஆகும். இந்த மண்டபத்தில்தான் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா, பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா ஆகியவை நடைபெறுகின்றன.
ஓவியக் கண்காட்சி அமைக்கும் முன்புவரை ஆயிரங்கால் மண்டபம் கிட்டங்கியாகவே இருந்தது. ஓவியக் கண்காட்சிக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பூஜைக்குப் பயன்படுத்தாத கலைநயம் கொண்ட சுமார் 50 சிலைகள் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டன.
தொடக்கத்தில் மின் விளக்கு வசதி முழுமையாக செய்யப்படாததால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்கப்பட்டது. மின் விளக்கு வசதி முழுமையாக செய்யப்பட்ட பிறகு கோயிலின் நடை திறந்திருக்கும் வரை, ஓவியக் கண்காட்சியும் திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் கூறியது. ஓவியக் கண்காட்சி திறக்கப்பட்டபோது, சில மாதங்களுக்குள் மத்திய சுற்றுல்லாத் துறையுடன் இணைந்து ரூ.1 கோடியில் ஒளி-ஒலி காட்சி நடத்தப்படும் என இந்து அறநிலையத் துறை அறிவித்தது. ஒளி-ஒலி காட்சியில் நெல்லையப்பர் கோயில் வரலாறு, கோயில் கட்டப்பட்ட வரலாறு, கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் காண்பிக்கப்படும். அதோடு மட்டுமன்றி, தமிழகத்தில் புகழ் பெற்ற ஆலயங்களில் வரலாறு, அங்கு நடைபெறும் திருவிழாக்கள், அந்த கோயிலின் சிறப்புகள் ஆகியவை காண்பிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், இது சம்பந்தமாக ஒரு பணிகூட நடைபெறவில்லை. மாறாக ஆயிரங்கால் மண்டபத்துக்கு நிரந்தரமாக பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் ஓவியக் கண்காட்சியும் தற்போது நடைபெறவில்லை. தொடக்கத்தில் தங்கத் தேர் செய்யும் பணி நடைபெற்றதால், பாதுகாப்பு கருதி பூட்டு போட்டதாக கூறிய கோயில் நிர்வாகம், தற்போது சரியான பதிலைக் கூற மறுக்கிறது.
ஒளி-ஒலி காட்சி அமைக்க இந்து அறநிலையத் துறை தோராய திட்ட மதிப்பீட்டையும், வரைவையும் மத்திய சுற்றுலாத் துறைக்கு அனுப்பியதோடு சரி, அதை மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
ஓராண்டுக்கு முன் மத்திய சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பொறியியல் குழு ஆயிரங்கால் மண்டபத்தில் ஆய்வு செய்தது. ஆய்வு முடிவில் முழுத் திட்ட மதிப்பீட்டைத் தயாரித்து விரைவில் அனுப்புமாறு அந்தக் குழு கூறிச் சென்றது. மேலும் மதுரை திருமலை நாயக்கர் மஹாலைப்போல மண்டபம் பெரியதாகவும் உயரமாகவும் இல்லாமல் இருப்பதால் ஏற்கெனவே போடப்பட்ட தோராய திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் அந்தக் குழு அறிவுறுத்தியதாம்.
இதன் காரணமாக இத் திட்டத்தில் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது. முழு திட்ட மதிப்பீட்டைத் தயாரித்து அனுப்பக் கோரி, ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் அதைக் கோயில் நிர்வாகம் அனுப்பவில்லை.
இத் திட்டத்தில் இந்து அறநிலையத் துறை ஆர்வமில்லாமல் ஆமை வேகத்தில் செயல்படுவது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்து அறநிலையத் துறை உடனடியாக முழு திட்ட மதிப்பீட்டைத் தயாரித்து மத்திய சுற்றுலாத் துறைக்கு அனுப்ப வேண்டும், மேலும் அவ்விரு துறைகளும் இத் திட்டத்தில் தனி அக்கறையோடு செயல்பட வேண்டும், பூட்டப்பட்டுள்ள ஆயிரங்கால் மண்டபம் புதுப்பொலிவோடு திறக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...