சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்துள்ள பெரும்படையார் சாஸ்தா கோயிலை ஒட்டி ஆமைப் பொத்தை (ஆமை வடிவிலான சிறிய மலைக் குன்று) உள்ளது. தற்போது இந்த பொத்தையின் ஒரு பகுதியையும் சீரமைத்து வருகின்றனர். இங்கு துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மண்தோண்டும் பெரிய இயந்திரங்களைக் கொண்டு பொத்தையை தோண்டி சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு மண்ணை தோண்டும்போது உள்ளே இருந்த பல அரிய புதைபொருள்கள் வெளிப்பட்டன. சில சேதமுற்றன. பண்டைகால முதுமக்கள் தாழி, கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், மண்பாத்திரங்கள், மண்ணில் செய்யப்பட்ட பிரிமணை, குடுவைகள், பானை மூடிகள், குமிழ் வடிவ கைப்பிடியுடன் கூடிய மூடிகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.