எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காவல் துறையில் காலாவதியாகும் திட்டங்கள் விளம்பர பெட்டியாக மாறிய முதலுதவி பெட்டி

 திருநெல்வேலி, ஆக. 21: திருநெல்வேலி மாநகர பகுதியில் முதலுதவி அளிப்பதற்காக வைக்கப்பட்ட பெட்டிகள் விளம்பரப் பெட்டிகளாக மாறியுள்ளன.  ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்பார்கள். ஆனால், திரு

News image
Updated On :26 டிசம்பர் 2023, 6:51 am

கே.வாசுதேவன்

 திருநெல்வேலி, ஆக. 21: திருநெல்வேலி மாநகர பகுதியில் முதலுதவி அளிப்பதற்காக வைக்கப்பட்ட பெட்டிகள் விளம்பரப் பெட்டிகளாக மாறியுள்ளன.

 ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்பார்கள். ஆனால், திருநெல்வேலி மாநகர காவல்துறையில் ஆணையர்கள் மாறினாலே காட்சிகள் மாறுகின்றன.

 இம் மாநகரத்தில் புதிதாக ஒவ்வோர் ஆணையர் பொறுப்பேற்கும்போதும் புதிதாக ஏதாவது ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர். ஆனால், அந்த ஆணையர் மாறிச் சென்ற பின்னர், அடுத்து வரும் ஆணையர் அதை கவனிக்காமல் விட்டுவிடுவதால், அத் திட்டம் காலாவதியாகிறது.

 2005-ம் ஆண்டில் ஈவ்-டீசிங், பெண்கள் தொடர்பான குற்றங்கள் அதிகமாக இருந்ததால் அப்போது மாநகர காவல் ஆணையராக இருந்த ஜெயந்த் முரளி, நகரின் முக்கியமான இடங்களில் புகார் பெட்டிகளை வைத்தார்.

 அந்தப் பெட்டியில் புகார் எழுதிப் போட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அப்போது தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு ஓரளவு பயனும் இருந்தது.

 ஆனால், அவருக்கு பின்னர் வந்த ஆணையரால் அத் திட்டம் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது.

 2006-ல் ஆணையராக இருந்த உமாகணபதி சாஸ்திரி, அப்போது அதிகமாக நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களை தடுக்கும்விதமாக ஒரு செல்போன் எண்ணை வழங்கி, அந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

 இதேபோல, மாநகர காவல்துறையோடு மக்கள் இணைந்து செயல்படும்விதத்தில் காவல் உதவி மையங்களை சுமார் 18 இடங்களில் திறந்துவைத்தார்.

 இந்த மையங்களால் சில பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 உமாகணபதி சாஸ்திரி பணி மாறுதலாகிச் சென்ற சில நாள்களிலேயே, இந்த இரு திட்டங்களும் செயலற்றுப் போயின.

 இந்த வரிசையில் இப்போது முதலுதவிப் பெட்டி சேர்ந்துள்ளது.

 ஜெயந்த் முரளி ஆணையராக இருந்தபோது, சாலை விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக சந்திப்பு பஸ்நிலையம், கொக்கிரகுளம் பஸ்நிறுத்தம், நெல்லையப்பர் கோயில் வாசல், வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தம் உள்ளிட்ட 20 இடங்களில் முதலுதவி சிகிச்சை பெட்டிகளை அமைக்கச் செய்தார்.

 இந்தத் திட்டத்தை மாநகர காவல்துறை, வண்ணார்பேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி மருத்துவமனையுடன் சேர்ந்து செயல்படுத்தியது. இதன் பராமரிப்புப் பணியை அந்த மருத்துவமனை ஏற்றிருந்தது.

 இந்தப் பெட்டிகள் விபத்தில் சிக்கியோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் வசதியாக இருந்தன.

 தற்போது அந்தப் பெட்டிகள் விளம்பரப் பெட்டிகளாகவே ஆங்காங்கு காட்சியளிக்கின்றன.

 பொதுமக்கள் நலன் கருதி பயன்தரும் நல்ல திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு மாநகர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.