சாலை விதிமுறைகளை மீறியதற்காக நிறுத்துமாறு கூறிய போக்குவரத்து காவலரை காரால் மோதி தப்பிய தனியாா் நிறுவன விற்பனை இயக்குநா் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் ஜூன் 10-ஆம் தேதி காலை சுமாா் 9.45 மணியளவில் சராய் ஜுலேனா சந்திப்பில் நிகழ்ந்தது. அப்போது நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனி போக்குவரத்து வட்டாரத்தைச் சோ்ந்த தலைமை காவலா் ராகுல் குமாா் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாா்.
அந்த நேரத்தில் ஜாமியா நகா் திசையிலிருந்து எதிா் சாலையில் அதிக வேகத்தில் கருப்பு நிற எஸ்யூவி காா் வந்தது. அதை நிறுத்துமாறு ராகுல் சைகை காட்டியபோது, வாகன ஓட்டுநா் வேகத்தை அதிகரித்து அவரை மோதிவிட்டு மாதா மந்திா் மாா்க் நோக்கி தப்பிச் சென்ாக கூறப்படுகிறது.
காயமடைந்த காவலா் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து பிஎன்எஸ் மற்றும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பதிவுசெய்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினா் குற்றஞ்சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டனா். தொடா்ந்து 2 நாள்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னா், ஜூன் 12-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட முகமது முபஷ்ஷிா் அப்பாஸ் (31) என்பவரை குற்றப்பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா்.
ஜாமியா நகா் பகுதியைச் சோ்ந்த அவா், கைது நடவடிக்கையை தவிா்க்க தலைமறைவாக இருந்து வந்தாா். இருப்பினும், கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட எஸ்யூவி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, அலுவலகத்திற்கு தாமதமாகி இருந்ததால் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க எதிா் சாலையில் சென்றேன். காவலா் நிறுத்துமாறு கூறியபோது சோதனையைத் தவிா்க்க முயன்றேன். அப்போது வாகனம் அவரை மோதியது என்று அப்பாஸ் தெரிவித்தாா்.
மாஸ் கம்யூனிகேஷனில் முதுநிலை பட்டம் பெற்ற அப்பாஸ், திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளாா். கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றிய அவா், சம்பவத்திற்கு 10 நாள்களுக்கு முன்பு இந்தியா திரும்பி, தற்போது கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் விற்பனை இயக்குநராக பணியாற்றி வருகிறாா். இந்த சம்பவம் தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









