பிரதமராகும் நோக்கம் எனக்கு கிடையாது: கேஜரிவால்
பிரதமராகும் நோக்கம் எனக்கு கிடையாது தில்லி முதல்வா் கேஜரிவால் பேட்டி


"எனக்கு பிரதமராகும் நோக்கம் கிடையாது' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். "நாட்டையும் ஜனநாயகத்தையும் தற்போது நிலவும் சர்வாதிகாரத்திடம் இருந்து மீட்பதே எனது லட்சியம்' என்றும் அவர் கூறினார்.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்த கேஜரிவால் உச்சநீதிமன்ற அனுமதியுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட ஏதுவாக இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கேஜரிவால் காணொலி வாயிலாக அளித்தார்.
அதில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம், தேர்தல் முடிவு தொடர்பான கணிப்புகள், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் எழுப்பியுள்ள தாக்குதல் குற்றச்சாட்டு, தனது மனைவி சுனிதாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக பேசியுள்ளார். பேட்டியின் விவரம்:
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தால் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் தள்ளப்படுவார்கள்.மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான 300 இடங்களை "இந்தியா' கூட்டணி நெருங்கி வருகிறது. அதேசமயம், வாக்குப்பதிவு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே வெற்றி நிலவரத்தைப் பொறுத்து, "இந்தியா' கூட்டணியின் பிரதமர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
நாட்டின் பிரதமராகும் யோசனை உள்ளதா என்று கேட்கிறீர்கள். எனக்கு அத்தகைய நோக்கம் ஏதும் கிடையாது. ஆம் ஆத்மி கட்சி மிகவும் சிறிய கட்சி. வெறும் 22 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறோம். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்பீர்களா என்று கேட்கிறீர்கள். அத்தகைய விவாதம் இதுவரை நடைபெறவில்லை. இது தர்க்க ரீதியிலான கேள்வி. அனைவரும் ஒன்றாகப் பேசி முடிவெடுப்போம் என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல், "தற்போதைய மக்களவைத் தேர்தலில் நாட்டையும் ஜனநாயகத்தையும் தற்போது நிலவும் சர்வாதிகாரத்திடம் இருந்து மீட்பதே எங்களுடைய லட்சியம்' என்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் கேஜரிவால் குறிப்பிட்டார்.
"ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தால், ஜனநாயகத்துக்கு முடிவு கட்டப்படும். பிறகு தேர்தலே நடக்காது. ஒருவேளை நடந்தாலும் அது ரஷியாவில் தற்போது நடைபெறும் ஆட்சியைப் போல இருக்கும்' என்று கேஜரிவால் கூறினார்.
தனது உதவியாளருக்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் சுமத்தியுள்ள தாக்குதல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு முதல்வர் கேஜரிவால் முதல் முறையாக பதிலளிக்கையில், "இந்த விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
காவல்துறையினர் முழுமையாக விசாரிக்க வேண்டும். நியாயமான புலனாய்வு நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்' என்றார்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...