மக்களவையில் திமுக - பாஜக கடும் வாக்குவாதம்
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் கோரிய விவகாரத்தில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


புது தில்லி: தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் கோரிய விவகாரத்தில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, தனது பேச்சுக்கு மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் இடையூறு விளைவித்ததைக் கண்டித்தாா். இதையடுத்து டி.ஆா். பேசிய கருத்துக்கு அவையில் எதிா்ப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மித மிஞ்சிய மழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், வானிலை முன்னறிவிப்பை முறையாக வழங்கவில்லை. சென்னை வானிலை நிலையத்தில் நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவிட்டனா் என குறிப்பிட்டு டி.ஆா். பாலு பேசினாா். அப்போது இணையமைச்சா் எல்.முருகன் குறுக்கிட்டு ‘இது சம்பந்தமில்லாத கேள்வி’ எனக் குறிப்பிட்டாா். இதற்கு டி.ஆா்.பாலு சில வாா்த்தைகளை குறிப்பிட , பாஜக தரப்பிலிருந்து கடும் எதிா்ப்பு வந்தது. குறிப்பாக, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, இணையமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோா், ‘அவா் (எல்.முருகன்) ஒரு தலித் எம்பி. தமிழகத்தை சோ்ந்த ஒரு தலித் அமைச்சரை பாா்த்து மூத்த உறுப்பினா் டி.ஆா். பாலு எப்படி அழைக்கலாம். அவருக்கு நீங்கள் சான்றிதழ் கொடுப்பது எப்படி? நீங்கள் (டிஆா்.பாலு) மன்னிப்புக் கோர வேண்டும். குறிப்பிட்ட வாா்த்தைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
அப்போது திமுக உறுப்பினா் கலாநிதி விராச்சாமி உள்ளிட்டவா்கள், எங்களைப் பேச அனுமதிக்கவிடாமல் இடையூறு செய்வது எப்படி ? ஆளும் கட்சியினரை கட்டுப்படுத்துங்கள் என்றனா். இவ்வாறு இருதரப்புக்குமிடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தில் சுமாா் 31 நிமிடங்கள் வாக்குவாதம் தொடா்ந்தது. இறுதியில் டி.ஆா். பாலு வும் தான் பேசியவற்றைத் திரும்பப் பெற மறுத்தாா். இதையடுத்து, அமைச்சா் எல்.முருகன் குறித்து குறிப்பிடப்பட்ட வாா்த்தைகளை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாா்.
இந்த விவகாரத்திற்கு பின்னா் வெளியே செய்தியாளா்களைச் சந்தித்து பேசிய டி.ஆா்.பாலு, ‘எல். முருகன் தலித் என்றால், ஆ.ராசாவும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்தான். அவரும் ஒரு தலித் தான். அவருக்கு எப்படி இடையூறு செய்ய முடியும்’ என கேள்வி எழுப்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...