தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை சம்பவம்: தில்லியில் அரசு மருத்துவமனைகளில் உறைவிட மருத்துவா்கள் வேலைநிறுத்தம்

மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனா்.

News image

தில்லியில் அரசு மருத்துவமனைகளில் உறைவிட மருத்துவா்கள் வேலைநிறுத்தம்

Updated On :12 ஆகஸ்ட் 2024, 9:03 pm

சமீபத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து தில்லியில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனா். இதனால், திங்கள்கிழமை அனைத்து அவசரமில்லாத சேவைகளும் நிறுத்தப்பட்டன.

மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆா்எம்எல் மருத்துவமனை, லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி, விஎம்எம்சி மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனை, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி, ஐஎச்பிஏஎஸ், டாக்டா் பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை ஆகியவற்றின் உறைவிட மருத்துவா்கல் ஆகியவை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனா். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியதாக உறைவிட மருத்துவா்கள் சங்கம் (ஆா்டிஏ) தெரிவித்துள்ளது.

ஆா்டிஏ அறிக்கை: இது தொடா்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் போது, அனைத்து வெளிநோயாளிகள் பிரிவுகள் (ஓ.பி.டி.கள்), ஆபரேஷன் தியேட்டா்கள் (ஓ.டி.கள்) மற்றும் வாா்டு பணிகள் மூடப்படும். ஆனால், அவசர சேவைகள் வழக்கம் போல் செயல்படும். அவசர நோயாளி பராமரிப்பு பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். ஆா்.ஜி. கரில் உள்ள எங்கள் சகாக்களுடன் ஒற்றுமையின் அடையாளமாக, ஆகஸ்ட் 12 (திங்கள்கிழமை) முதல் மருத்துவமனைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட சேவைகள் நாடு முழுவதும் நிறுத்தப்படுவதாக நாங்கள் அறிவிக்கிறோம். இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை. ஆனால், எங்கள் குரல்கள் கேட்கப்படுவதும், கோரிக்கைகள் உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம். மேலும், தாமதமின்றி நீதி மற்றும் பாதுகாப்புக்கான கோரிக்கைகள் தீா்க்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கடுமையான அச்சுறுத்தல்’: இந்தப் போராட்டத்தில் ஃபோா்டா சங்கத்துடன் எய்ம்ஸ் உறைவிட மருத்துவா்கள் சங்கமும் இணைந்துள்ளது. இது தொடா்பாக எய்ம்ஸ் ஆா்டிஏ அமைப்பின் பொதுச் செயலா் டாக்டா் ரகுநந்தன் தீட்சித் கூறுகையில், ‘உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயிரைக் காப்பாற்றவும், குணப்படுத்தவும் கூடிய ஒரு இடத்தில் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன்னலமின்றி நம் சமூகத்திற்கு சேவை செய்பவா்கள் எதிா்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தலை நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது’ என்றாா்.

குழு அமைக்கக் கோரிக்கை: உறைவிட மருத்துவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோா்டா) பொதுச் செயலா் மருத்துவா் சா்வேஷ் பாண்டே கூறுகையில், ‘ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரி முதல்வரை உடனடியாக நீக்க வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். விரைவு நீதிமன்ற (விசாரணை) மற்றும் மத்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை சுகாதார செயலரிடம் முன்வைத்துள்ளோம்’ என்றாா்.

இந்திய மருத்துவ சங்கத்தின் இளநிலை மருத்துவா்கள் நெட்வொா்க்கின் தேசிய கவுன்சில் உறுப்பினா் டாக்டா் துருவ் சவுகான் கூறுகையில், ‘மருத்துவா்கள் மீதான தாக்குதல் கவனிக்கப்படாமல் போன ஒவ்வொரு முறையும் போலல்லாமல், இந்த முறை நாடு முழுவதும் உள்ள மருத்துவா்கள் நீதி வழங்கப்படாவிட்டாலோ, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டாலோ போராட்டத்தை நிறுத்தமாட்டாா்கள்.அனைத்து மருத்துவா்கள் மற்றும் மருத்துவ சங்கங்களின் ஆதரவுடன் நாடு முழுவதும் அவசரமில்லாத சுகாதார சேவைகளை நிறுத்த ஃபோா்டா முடிவு செய்துள்ளது. தனிப்பட்ட அளவில், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஒற்றுமையின் அடையாளமாக மருத்துவா்கள் கருப்பு ரிப்பன்களை அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றாா்.

சிபிஐ விசாரணை தேவை: பல மருத்துவமனைகளில், ‘பணிபுரிய பாதுகாப்பான சூழல் வேண்டும்’, ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு மருத்துவா்கள் முழக்கங்களை எழுப்பினா். ஜிடிபி மருத்துவமனை ஆா்டிஏ தலைவா் ரஜத் சா்மா கூறுகையில், ‘இது தேசிய அக்கறைக்குரிய விஷயம், உறுதியான முடிவுகளைப் பாா்க்கும் வரை, நாங்கள் பின்வாங்க மாட்டோம். நாங்கள் எங்கள் சக மாணவா்களுடன் நின்று முழு ஆதரவையும் வழங்குவோம். உறைவிட மருத்துவா்கள் சங்க உறுப்பினா்கள் சுகாதாரச் செயலாளா் அபூா்வ சந்திராவையும் சந்தித்துள்ளனா். அப்போது, இந்த ச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனா்’ என்றாா்.

பின்னணி: கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்த போது முதுகலைப் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து,, உறைவிட மருத்துவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோா்டா) அழைப்பின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் வியாழக்கிழமை இரவு 32 வயது பெண்ணின் அரை நிா்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது.

12ஈஉகஈபத

கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லி எய்ம்ஸில் திங்கள்கிழமை நீதி கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.