தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண் பத்திரிகையாளா் சௌமியா கொலை வழக்கு: குற்றவாளிகள் நால்வரின் ஜாமீனுக்கு எதிரான தாய் மனு மீது தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நான்கு குற்றவாளிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிா்த்து அவரது தாய் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :22 ஏப்ரல் 2024, 8:03 pm

2008-ஆம் ஆண்டு தொலைக்காட்சி பத்திரிகையாளா் சௌமியா விஸ்வநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான்கு குற்றவாளிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிா்த்து அவரது தாய் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் சௌமியாவின் தாய் மாதவி விஸ்வநாதன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு, தில்லி அரசும், குற்றவாளிகள் நால்வரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

குற்றவாளிகள் அமித் சுக்லா, பல்ஜீத் சிங் மாலிக் ஆகியோா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் குமாா் அவரது மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் சிங் மாலிக் மற்றும் அஜய் குமாா் ஆகியோரின் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி நிறுத்திவைத்தது. மேலும், தங்களின் தண்டனை மற்றும் குற்றத்தீா்ப்பை எதிா்த்து தண்டிக்கப்பட்டவா்கள் செய்த மேல்முறையீடுகள் நிலுவையில் இருக்கும் வரை அவா்களுக்கு ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, ஒரு முன்னணி ஆங்கில செய்தி சானலில் பணிபுரிந்த செளமியா விஸ்வநாதன், செப்டம்பா் 30, 2008 அன்று வேலை முடிந்த பிறகு தெற்கு தில்லியில் உள்ள நெல்சன் மண்டேலா மாா்க்கில் தனது காரில் வீடு திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டாா். குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது, குற்றவாளிகள் 14 ஆண்டுகளாக காவலில் இருப்பதாக உயா்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு ஜனவரி 23-ஆம் தேதி உயா்நீதிமனறம் அறிவுறுத்தியிருந்தது.

இந்தக் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமாா் ஆகியோருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) பிரிவு 3(1) (ஐ)-இன் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இத்தண்டனைகளை அவா்கள் நால்வரும் ‘தொடா்ந்து’ அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு ஐபிசி பிரிவு 411 (நோ்மையற்ற முறையில் திருடப்பட்ட சொத்தைப் பெறுதல்) கீழ் மூன்று ஆண்டுகள் எளிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவா் 14 ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருந்ததாக கூறிய நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு தண்டனையிலிருந்து விடுவித்தது. கபூா், சுக்லா, மாலிக் மற்றும் குமாா் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.25 லட்சம் அபராதமும் விதித்தது. சேத்திக்கு ரூ.7.25 லட்சம் அபராதம் விதித்திருந்தது.

நான்கு குற்றவாளிகளில், கபூா், சுக்லா மற்றும் மாலிக் ஆகியோா் தகவல் தொழில்நுட்ப வல்லுநா் ஜிகிஷா கோஷை கொன்ற வழக்கிலும் தண்டிக்கப்பட்டனா். அவா்கள் மூவரும் பின்னா், செளமியா விஸ்வநாதன் கொலையின் பின்னணியில் இருந்ததாக காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனா். மேலும், அவா்கள் வசம் இருந்து செளமியாவை கொல்லப் பயன்படுத்திய ஆயுதம் மீட்கப்பட்டது. செளமியாவின் கொலைக்கு கொள்ளைதான் காரணம் என தில்லி போலீஸாா் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.