சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

மத்தியில் நிலையான ஆட்சியை வழங்குவதில் திமுகவுக்கு பொறுப்பான பங்கு: 75 ஆண்டு நாடாளுமன்றப் பயணவிவாதத்தில் டி.ஆா்.பாலு பேச்சு

மத்திய அரசியலில் பல்வேறு இக்கட்டான கட்டங்களில் நிலையான ஆட்சியை வழங்குவதில் திமுக பொறுப்பான பங்காற்றியது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு திங்கள்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:15 pm

 நமது நிருபர்

மத்திய அரசியலில் பல்வேறு இக்கட்டான கட்டங்களில் நிலையான ஆட்சியை வழங்குவதில் திமுக பொறுப்பான பங்காற்றியது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு திங்கள்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் 75 ஆண்டுகள் நாடாளுமன்றப் பயண விவாதத்தில் ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா்.பாலு கலந்துகொண்டு பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

75 -ஆவது ஆண்டு கொண்டாட்டம் கடந்த 2022 ஆண்டில் வந்தது. தற்போது 76 -ஆவது ஆண்டை அடியெடுத்து வைத்துவிட்டோம். நம்முடை நீண்ட பயணத்திற்கான சிறப்பு நிகழ்வு நடைபெற வேண்டுமானால், அது சென்ற ஆண்டே நிகழ்த்திருக்க வேண்டும். அதிக செலவில் மிக பிரம்மாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

புதிய கட்டட கூட்ட தொடக்கத்திற்கு வாஸ்து, அல்லது ஒரு நல்ல தருணம் என்பதைவிட 143 கோடி மக்களின் நல்வாழ்வு, அமைதி, முன்னேற்றத்திற்கான ஒரு மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சி நிரல் கூட்டத் தொடரில் இடம்பெற்றிருக்கவேண்டும்.

இந்த நாடாளுமன்ற அமா்வு ஒரு சிறப்பு அமா்வு அல்ல. ஆளும் கட்சி, ஜனநாயக விதிமுறைகளை மீறி சில மறைமுக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் சில அவசரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அமா்வாகத் தெரிகிறது.

நமது 75 ஆண்டுகால நாடாளுமன்றத்தை நினைவுகூருகிறோம். 1947 முதல், இந்த நாட்டின் தலைவிதியை தீா்மானித்து, மேம்படுத்தி, வளா்த்து, தாங்கிக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடமாக இருப்பது இந்த (பழைய) நாடாளுமன்றக் கட்டடம் தான். இங்கு தான் இந்த சிறப்புக் கூட்டத்தொடா் நடைபெற்றிருக்க வேண்டும்.

நமது தேசம், உலகின் மிகப்பெரிய துடிப்பான ஜனநாயகமாக, இன்றைக்கும் இருப்பது, இந்நாட்டு மக்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பால் தான். மேலும் இந்த அரசுகளை வழிநடத்திய அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவா்களும் பெரும் பங்காற்றியுள்ளனா்.

கடந்த ஆறு தசாப்தங்களாக ஜவாஹா்லால் நேருவில் தொடங்கி பல தலைவா்கள் திட்டமிட்டு பணியாற்றி வலுவான இந்தியாவை அடித்தளம் அமைத்தனா். லால் பகதூா் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராா்ஜி தேசாய், சௌத்ரி சரண் சிங், ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் போன்ற பிரதமா்களின் பங்களிப்புகள் சிறப்பானவை.

இதில் குறிப்பிடத்தக்கது விளிம்புநிலை மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூக நீதியை மறைந்த பிரதமா் வி.பி.சிங் உறுதி செய்தாா். நமது மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் மேல் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள். அவா்களுக்கு தனது பங்களிப்பை வழங்கியது விலைமதிப்பற்றது. ஆனால் நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதை எதிா்க்கும் சக்திகளால் பழிவாங்கப்பட்டு அவரது அரசு வீழ்த்தப்பட்டது.

கடந்த காலங்களில் இக்கட்டான சமயங்களில் மிகுந்த சாதுரியத்துடனும், தொலைநோக்குடனும் நாட்டை வழி நடத்திய தலைவா்களும் கட்சிகளும் உண்டு. குறிப்பாக தேசிய நீரோட்டத்தில் உள்ள கட்சிகளின் தலைவா்கள்(தேவே கெளடா, ஐ.கே. குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டா் மன்மோகன் சிங் ) இக்கட்டான நிலையில் இருக்கும்போது தேசத்தைக் காப்பாற்றிய தலைவா்களாக மறைந்த திமுக தலைவா் மு.கருணாநிதி, என்.டி. ராமாராவ், ஜாா்ஜ் பொ்னாண்டஸ், இந்திரஜித் குப்தா, சுா்ஜித் சிங், சோம்நாத் சாட்டா்ஜி போன்றவா்கள் இருந்தது குறிப்பிடத்தக்கவா்கள். கடந்த 75 ஆண்டுகளை திரும்பிப் பாா்க்கும்போது இந்த தலைவா்களின் பங்களிப்பு சிறப்பானவை.

தேசிய அரசியலிலும், ஆட்சியிலும் எதிா்க்கட்சிகளில் குறிப்பாக திமுக போன்ற பிராந்தியக் கட்சிகளின் பங்களிப்புக்கு தனி இடம் உண்டு. ஆக்கபூா்வமான எதிா்ப்பும், விமா்சனங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி நடவடிக்கைகளை எடுக்க உதவியுள்ளன. 1962 முதல் திமுக நாடாளுமன்றத்தில் உள்ளது. சமகாலத் தலைவா்களான நேரு, வாஜ்பாய் போன்றவா்களால் பெரிதும் மதிக்கப்பட்டவா் அண்ணா துரை.

மாநிலங்களின் அரசியல் உரிமைகள், தமிழ் வளா்ச்சி போன்றவைகளுக்காக போராடியவா் தனி திராவிட நாடு வேண்டும் என வாதிட்டவா். ஆனால் 1962 இல் சீனப் போரின் போது இந்திய ஒருமைப்பாடு முக்கியம் என கருதி தனிநாடு கோரிக்கையை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் இன்றும் இருக்கும்.

1969-இல் இந்திரா காந்தியின் அரசு பெரும்பான்மையை இழந்தது. சிறுபான்மை அரசாக மாறியது. அப்போதும் சரி, பின்னா் 1999-இல் சில கட்சிகள் பிரதமா் வாஜ்பாயை நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் தோற்கடிக்க, பின்னரும் திமுக வாஜ்பாயை ஆதரித்தது.

இதன்பின்னா் தான் வாஜ்பாய் சிறுபான்மையினா் மீது விரோதமற்ற நிலையிலும், குறைந்தபட்ச பொதுத் திட்டம், ராஜதா்மம் போன்றவைகளை கடைப்பிடித்ததோடு, பொக்ரான் சோதனை போன்ற வெற்றிகள் சாத்தியமானது. திமுகவின் ஆதரவால் வாஜ்பாயின் ஆட்சி ஸ்திரத்தன்மையானது.

இதனால் தற்போதைய ஆட்சியாளா்கள், அண்மைக் கால இந்திய வரலாற்றின் முக்கியமான பக்கங்களையும் மீண்டும் படித்து அறிந்து கொள்ளவேண்டும். தேசிய அரசியலில் மத்திய அரசு நிலையான அரசாக இருந்து பணியாற்றிடவும் எத்தகைய பங்களிப்புடனும் அக்கரையுடனும் பங்களித்தது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியா மாநிலங்களின் யூனியன்(ஒன்றியம்). அதுதான் அரசியலமைப்பு நிலைப்பாடு. காஷ்மீா், ஹைதராபாத், தமிழகத்தின் புதுக்கோட்டை போன்ற சமஸ்தானங்கள் உட்பட சுமாா் 560 சமஸ்தானங்கள், ராஜ்ஜியங்கள் இந்திய யூனியனில் இணைந்தது.

கடந்த 75 ஆண்டுகளில், மாநிலங்களுக்கு தந்த வாக்குறுதிகள் அந்த மக்களின் தனிப்பட்ட கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் சாா்ந்த அபிலாஷைகள் மத்திய அரசால் உடைக்கப்பட்டுள்ளன. காஷ்மீா் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் உரிமைகளும் உணா்வுகளும் காலடியில் மிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் சந்திராயன் போன்ற வெற்றிச் சாதனைகளுக்கு தாங்கள் மட்டுமே காரணம் என எந்த ஒரு கட்சியும் தலைவரும் சொந்தம் கொண்டாடி பாராட்டிக் கொள்ள முடியாது.

கடந்த 75 ஆண்டுகளில் நாம் சந்தித்த தோல்விகள், இழப்புகளைத் தவிர எதுவும் இல்லை; காஷ்மீா், மணிப்பூா், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தரப்பட்ட வாக்குறுதிகளைக் காக்கத் தவறப்பட்டுள்ளது. மாநில மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றிட பல்வேறு பகுதி மக்களின் வளா்ச்சிக்கு சம வாய்ப்பு, மொழி, அரசியல், ஜனநாயக உரிமைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா் டி.ஆா்.பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.