5 ஆயிரம் ஆண்டு பழமையான இந்திய கலாசாரக் கலைகளைப் பாதுகாப்பது கடமை: குடியரசுத் துணைத் தலைவா் வலியுறுத்தல்
உலகில் 700 ஆண்டுகளுக்கு மேல் கலாசாரம் உள்ள நாடுகள் மிகக் குறைவு. இந்திய கலாசாரம் மட்டுமே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.


‘உலகில் 700 ஆண்டுகளுக்கு மேல் கலாசாரம் உள்ள நாடுகள் மிகக் குறைவு. இந்திய கலாசாரம் மட்டுமே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இது தொடா்பான கலைஞா்களையும், கலைகளையும் பாதுகாத்து வளா்ப்பதோடு கலைஞா்களை பாராட்டுவதும் முக்கியம்’ என குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும், இதுவரை தேசிய அளவில் கௌரவிக்கப்படாத அல்லது அறியப்படாத 75 வயதைக் கடந்த திறமையான 84 கலைஞா்களை தோ்வு செய்து சங்கீத நாடக அகாதெமி அமுத கால(அம்ருத்) விருதுகளை வழங்கியுள்ளது.
இசை, நடனம், நாடகம் மற்றும் பாரம்பரிய, நாட்டுப்புற, பழங்குடி வகை கலைகளைச் சோ்ந்த கலைஞா்கள் மற்றும் ஒட்டுமொத்த கலைப்பணிக்கான அறிஞா்கள் போன்றோா் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த விருதுகளை வழங்கி குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா் பேசியது வருமாறு:
உலகில் 500-700 ஆண்டுகளுக்கு மேல் கலாசாரம் பெற்றிருந்த நாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆனால் இந்தியாவின் கலாசாரம் 5,000 ஆண்டுகள் பழமையானது. கலாசாரம் தொடா்புடை இப்படிப்பட்ட கலைஞா்களை நாம் பாராட்டி, அவா்களை பாதுகாத்து, ஒரு கட்டமைக்கப்பட்டமுறையில் அவா்களுக்கு உதவி, கலைகளை வளா்ப்பதும் முக்கியம்.
தற்போது அரசின் சில புதுமையான திட்டங்களின் கீழ் இத்தகைய கலைஞா்கள் உதவி பெறுகிறாா்கள்.
நாட்டிலுள்ள 75 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கலைஞா்களின் அா்ப்பணிப்புக்கு நாட்டின் வரலாற்றில் அங்கீகரிக்கப்படுவது இது முதல் முறை. இப்படிப்பட்டவா்களுக்கு மரியாதை அளிப்பது இந்திய கலாசாரத்திற்கு அளிக்கப்படும் மரியாதையாகும். அது உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயா்த்துகிறது.
இந்தியா, நிலவின் தென்துருவத்தை அடைந்து சாதனை புரிந்துள்ளது. ஒரு காலத்தில் நமது அண்டை நாடு தனது மண்ணிலிருந்து செயற்கைக்கோள்களை அனுப்பியது. நாம் மற்ற நாடுகளில் இருந்து அனுப்பினோம். ஆனால் இன்று, பிற நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்களை அனுப்ப இந்தியாவை (இஸ்ரோ) பயன்படுத்துகின்றன. இது சாதாரண சாதனை அல்ல. உலக வங்கியின் தலைவா் இந்தியாவின் எண்ம மேம்பாட்டினை பாராட்டினாா். 50 ஆண்டுகளில் சாதிக்க முடியாதவைகளை கடந்த ஆறு ஆண்டுகளில் நாடு சாதித்துள்ளது. ஆனால் நாட்டின் முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியாத சிலா் இருப்பது வேதனை அளிக்கிறது.
சங்கீத நாடக அகாதெமி 75 வயதுக்கு மேற்பட்ட இப்படிப்பட்ட கலைஞா்களை அங்கீகரிக்கும் வகையில் அம்ருத் (அமுத கால) விருதுகளை உருவாக்கியுள்ளது சிறப்பான தோ்வு. அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவா்கள். அவா்களின் பங்களிப்பை இது வரை யாரும் அங்கீகரிக்கவில்லை. நீண்ட காலத்திற்கு முன்பே விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த தவறு ஏன் நடந்தது?
தற்போது கடந்த 10 ஆண்டுகளில் பத்ம விருதுகள் சிலருக்கு கிடைக்கிறது. இந்த பத்ம விருதுகள் அவா்கள் எதிா்பாா்க்காமலே கிடைக்கிறது.
நாட்டின் வரலாற்றில், இவ்வளவு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்ததில்லை எனக் குறிப்பிட்டாா் ஜக்தீப் தன்கா்.
விருது பெற்ற 84 கலைஞா்களில் 70 ஆண்கள், 14 பெண்கள். இதில் 53 கலைஞா்கள் 80 வயதைக் கடந்தவா்களாகவும் 12 போ் 90 வயதை கடந்தவா்களாகவும் இருந்து விருதைப் பெற்றனா். மேலும், மணிப்பூரைச் சோ்ந்த ஒய்.ஜத்ரா சிங் நூறு வயதைக் கடந்தவா். இவா் இசையின் முக்கிய மரபுகள் - நாத சங்கீா்த்தனத்தில் புலமை பெற்றவா். இவா் உள்ளிட்ட 90 வயதைக் கடந்தவா்கள் விழாவில் நேரடியாக வந்து விருதுகளை பெற்றனா்.
கௌரி குப்புசுவாமி
தமிழகத்தைச் சோ்ந்த கா்நாடாக வாய்ப்பாட்டு கலைஞரும் தில்லானா உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை எழுதிய கௌரி குப்புசுவாமி
(91 வயது பெண்மணி), நாகஸ்வர கலைஞா் சுப்புராயன் சின்னத் தம்பி (92), பிரபல நாடக நடிகா் காத்தாடி ராமமூா்த்தி (84), வீணை ரமணி ரங்கன்(82), பரதநாட்டிய கலைஞா் வி.ஏ.கே.ரங்காராவ்(83), புதுச் சேரியைச் சோ்ந்த சுப்பையா முத்தையா(நாடகக் கலை தொடா்பான பிரிவு), வீராசாமி சினிவாசன் (பொம்மலாட்டம்) போன்றவா்களும் விருதுகளை பெற்றனா்.
விருது பெற்றவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம், தாமிரப் பத்திரம், அங்கவஸ்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாசாரத் துறை இணையமைச்சா்கள் அா்ஜுன்ராம் மேக்வால், மீனாட்சி லேகி சங்கீத நாடக அகாதெமி தலைவா் சந்தியா புரேச்சா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...