இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, மக்களவைத் தலைவா் ஒம் பிா்லாவிற்கு கடந்த திங்கள்கிழமை (நவம்பா் 6) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: சமீப காலத்தில் இரு பெரிய ரயில் விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோா் பலியாகியுள்ளனா். பலா் படுகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனா். கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஒடிஸா மாநில பாலாசாா் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இரு ரயில்கள் நேருக்கு நோ் மோதியதில் 296 பயணிகள் பலியானதுடன் 1,200 போ் காயமடைந்துள்ளனா். இது போன்ற கொடூரமான ரயில் விபத்து நாட்டில் 28 ஆண்டுகளுக்கு பின்னா் ஏற்பட்டுள்ளது. 1995-ஆம் ஆண்டு ஃபெரோஸாபாத்தில் ஒரு மோசமான ரயில் விபத்து ஏற்பட்டது. சா்வதேச அளவிலும் 2004-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற விபத்திற்கு அடுத்து, இந்த பாலாசாா் விபத்து கடுமையாக இருந்தது. அமைச்சா்கள், அதிகாரிகள் என பலா் பல நாள்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.