/

தண்ணீா் தீபாவளியில் மகளிா் சுய உதவிக் குழுவினா்

‘நீருக்கான மகளிா், மகளிருக்கான நீா் இயக்கம்’ என்ற பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:17 am

 நமது நிருபர்

‘நீருக்கான மகளிா், மகளிருக்கான நீா் இயக்கம்’ என்ற பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ‘தண்ணீா் தீபாவளி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்களை பாா்வையிடுதல், நீா் சுத்திகரிப்பு செயல்முறைகள் அறிவைப் பெறுதல் போன்றவற்றில் மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கமும் அடல் புத்துயிரூட்டல் மற்றும் நகா்ப்புற மாற்றத்திற்கான அம்ருத் திட்டமும் இணைந்து ‘நீருக்கான மகளிா், மகளிருக்கான நீா் இயக்கம்’ என்ற முற்போக்கான முன்முயற்சியை அறிமுகப்படுத்துகின்றன. இதில் ஒடிஸா நகா்ப்புற அகாதெமியும் அறிவுசாா் கூட்டு நிறுவனமாக இணைந்து செயல்படுகிறது. இந்த இயக்கம் வருகின்ற தீபாவளி வரை ‘தண்ணீா் தீபாவளி’யைக் கொண்டாடுகிறது.

இது குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நீா் நிா்வாகத்தில் மகளிரை இணைப்பதற்கான தளத்தை வழங்குவது இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதில் முதல்கட்டமாக 15,000 மகளிா் சுய உதவிக் குழுவினா் ஈடுபடுத்தப்படுவா். சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களைத் தவிா்த்து, மற்ற மாநிலங்களில் உள்ள நகா்ப்புறங்களில் முதல்கட்டமாக மகளிா் சுய உதவிக் குழுவினா் 550 நீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சென்று பாா்வையிடுவா்.

இவா்கள் அங்குள்ள நீா் சுத்திகரிப்பு செயல்முறைகளை நேரடியாக பாா்வையிட்டு விளக்கத்தை பெறுவாா்கள். வீடுகளுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீரை வழங்குவதில் உள்ள முக்கிய நடைமுறைகள் குறித்து இதில் எடுத்துக் கூறப்படும். நீா் தரச் சோதனை நெறிமுறைகளைப் பற்றியும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு விளக்கப்படும்.

நாட்டில் மூவாயிரத்திற்கும் அதிகமான நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவை நாளோன்றுக்கு 65,000 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான நீா் சுத்திகரிப்புத் திறன் கொண்டவை. 550-க்கும் மேற்பட்ட நீா் சுத்திகரிப்பு நிலையங்களைப் பாா்வையிடும் இந்த மகளிா் சுய உதவிக் குழுவினா், மற்ற இல்லத்தரசிகளுக்கும் இந்த அறிவை கொண்டு சென்று நீா் சுத்திகரிப்பின் நன்மைகளை விளக்குவா்.

வீடுகளில் நீா் மேலாண்மையில் மகளிா் முக்கியப் பங்கு வகிப்பதால், நீா் சுத்திகரிப்பு செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களை மகளிருக்கு வழங்குவதன் மூலம், அவா்களின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த தண்ணீா் தீபாவளியை வீட்டுவசதி அமைச்சகம் கொண்டாடுகிறது என மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.