புது தில்லி, ஜூன் 30: நாட்டின் தலைநகர் தில்லிக்கு பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தில்லியில் சுற்றிப் பார்க்க எத்தனையோ இடங்கள் இருந்தாலும் அவர்கள் மறக்காமல் செல்லும் ஒரு இடமாக இருக்கிறது இந்திரா காந்தியின் நினைவு இல்லம்.
புது தில்லி சப்தர்ஜங் சாலையையும், அக்பர் சாலையையும் இணைக்கும் சந்திப்பில் எண்: 1-ல் அமைந்துள்ள இந்திரா காந்தியின் நினைவிடம். மொழி, மாநிலம், ஜாதி, மதங்களைக் கடந்து சுற்றுலா பயணிகள் ஒன்றுகூடும் இடமாக இருக்கிறது.
நாட்டின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும், பிரதமராகவும் இந்திரா காந்தி பதவி வகித்தபோது வசித்த இல்லம்தான் இந்த நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது. அவரது நினைவலைகள் பரவிக் கிடக்கும் இடமாகக் காட்சியளிக்கிறது இந்த இல்லம்.
இந்த நினைவிடத்தின் முதல் அறைக்குள் நுழையும் பகுதியில், வெள்ளை நிறச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படம் பார்வையாளர்களை வரவேற்பதாக உள்ளது. அந்தப் படத்தில், வீட்டின் வாயில் படியில் நிற்கும் சிறிய குழந்தைக்கு முகம் மலர, கையை உயர்த்தி வணக்கம் தெரிவிக்கிறார் இந்திராகாந்தி. அப்படத்தைப் பார்க்கும்போதே பார்வையாளர்களின் மனத்தில் மத்தாப்பு ஜொலிக்கிறது.
அறைக்குள் நுழைந்தவுடன் சுவர்களில் ஆங்கிலம் மற்றும் பிறமொழி நாளிதழ்கள் பார்வையில் படுகின்றன. அவற்றில் அக்டோபர் 31, 1984-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திரா காந்தியின் படுகொலைச் சம்பவம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
அதற்கு நேர் எதிரே உள்ள தூணில் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஒரிஸ்ஸô மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கடைசி பேச்சின் சில வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
"நாடு பெரிது, உயிர் பெரிதல்ல' என்பதே அது. எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!
புகைப்படத் தொகுப்பு: இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம், பல்வேறு நாடுகள் அவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள், இந்திரா காந்தி படித்துக் கொண்டிருந்தபோது தன்னுடன் வைத்திருந்த ரவீந்திரநாத் தாகூரின் புகைப்படம் தாங்கிய உறை, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியுடன் 1964-ல் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இந்திரா காந்தி உடனிருக்கும் புகைப்படம், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அதாவது பிரதமராக ஏகமனதாக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட
( 19.1.1966) புகைப்படம், குடியரசுத் தலைவராக இருந்த எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்கும் (24.1.1966) புகைப்படம், மொரார்ஜி தேசாய், காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆகியோருடன் இந்திரா காந்தி இருக்கும் புகைப்படம், இந்திரா காந்தியை ஜெகஜீவன்ராம், ஆச்சார்ய வினோபா பாவே ஆகியோர் வாழ்த்துவது ஆகியவை காட்சியளிக்கின்றன.
1974, டிசம்பர் 22-ம் தேதி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட போக்ரான் பகுதிக்கு அணுசக்தி ஆணையத் தலைவராக இருந்த ஹோமி சேத்னா, அமைச்சர் கே.சி.பந்த் ஆகியோருடன் இந்திரா காந்தி செல்வது போன்ற பல அரிய புகைப்படங்கள் காட்சியில் உள்ளன.
குடும்பம், திருமணக் காட்சிகள்: இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணக் கோலம், இந்திரா காந்தி தனது மகன்கள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, மருமகள்கள் சோனியா, மேனகா காந்தி ஆகியோருடனும், பேத்தி, பேரன்களுடன் அளவளாவும் புகைப்படங்களும், ராஜீவ் காந்தி- சோனியா காந்தி,
சஞ்சய் காந்தி-மேனகா காந்தி ஆகியோரது புகைப்படங்களும் அறைச் சுவரை அலங்கரிக்கின்றன.
அலகாபாத்தில் ஆனந்த் பவனில் வசித்தபோது, தந்தை ஜவாஹர்லால் நேரு, தாயார் கமலா நேரு ஆகியோருக்கு மட்டும் இந்திரா காந்தி செல்லப் பிள்ளையாக இல்லை. மகாத்மா காந்திக்கு அவர் அன்புக்குரிய பேத்தியாகவும் இருந்தார் என்பதை அவரது இளமைக் கால புகைப்படங்கள் உணர்த்துகின்றன.
மேலும், ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதன் ஆசிரமத்திற்கு 1934-35ம் ஆண்டில் இந்திரா காந்தி தனது தோழியருடன் சென்று அங்கு சமூகப் பணியில் ஈடுபட்ட புகைப் படங்களும் இளமைக் காலத்தில் அவருக்கு கிடைத்த சேவை அனுபவத்தை எடுத்துக் கூறுகின்றன.
"உலகமே எனது பல்கலைக்கழகம்':
இந்திரா புத்தக வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது அவரது படிப்பு அறையைப் பார்க்கும்போதே பளிச்சிடுகிறது. அறையை புத்தக அலமாரிகள் நிறைந்துள்ளன.
உயரமான அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுப்பதற்கு சிறிய ஏணியும் இங்குண்டு. இதைப் பார்க்கும்போது "உலகமே எனது பல்கலைக்கழகம்' என்று கூறிய இந்திராவின் வார்த்தைகளில் உள்ள ஆழத்தை நன்றாக உணர முடிகிறது. அதேபோன்று, அவருடைய தனிப்பட்ட உபயோகத்துக்காக உள்ள படுக்கை அறை, வரவேற்பு அறை, உடைமாற்றும் அறையும் நம் பார்வைக்கு உருவாக்கப்பட்டுள்ளன.
சோகத்தை வரவழைக்கும் உடைமைகள்: நினைவிட அறையின் ஒருபுறமாக உள்ள கண்ணாடி அடைக்கப்பட்ட பகுதியின் கீழ் தளத்தில் காவி நிறச் சேலை வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே சோகத்தை ஏற்படுத்தும்.
அதே போன்று, அரசியலில் இந்திராவுக்கு ஏற்பட்ட ஏற்றங்கள், இறக்கங்கள் தொடர்பாக அக்கால கட்டத்தில் நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பயன்படுத்திய பொருள்களும், கிடைத்த பரிசுகளும்: இந்திரா காந்தி பயன்படுத்திய கண்ணாடிக் குவளை, அவருக்கு 1972, ஜூலை 8-ம் தேதி வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது, கல்யாணச் சேலை, தோலால் ஆன பெட்டி, வெளிநாட்டுத் தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள் என பலவும் பேழைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
துயரச் சம்பவம் நிகழ்ந்த இடம்: நினைவிடத்தின் வெளிப்புறத்தில் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட இடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தபின் நினைவிடத்தைவிட்டு வெளியே செல்லும் பொதுமக்கள், இந்த தேசத்தின் நன்மைக்காக இன்னுயிரை ஈத்த இந்திராவின் நினைவுகளை கனத்த மனதுடன் சுமந்து செல்வதைக் காண முடிகிறது.
இந்திரா காந்தியின் காலத்தில் வாழ்ந்திராத இன்றைய இளைய தலைமுறையினரும் அவர் தேசத்திற்காக ஆற்றிய பணிகள், அர்ப்பணிப்பு, உயிர்த் தியாகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள ஆவல் கொள்கின்றனர்.
நினைவிடத்திற்கு பார்வையிட வரும் பல்வேறு மாநிலத்தவர்கள் நினைவிடத்தைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது இந்திரா காந்தியின் நினைவுகளில் மூழ்கியபடி செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


