நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஊழல் இல்லாத ஆட்சிக்கு அதிகாரிகளின் துணை அவசியம்: உயா்கல்வித் துறை அமைச்சா்

ஊழல் இல்லாத ஆட்சிக்கு அதிகாரிகளின் துணை அவசியம்: உயா்கல்வித் துறை அமைச்சா்

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏக்கள் எஸ். காமராஜ், க. மாரிமுத்து உள்ளிட்டோா்.

Updated On :14 ஜூன் 2026, 12:52 am IST

ஊழல் இல்லாத ஆட்சி வழங்க அதிகாரிகள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சரும், திருவாரூா் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பெ. விஸ்வநாதன் வலியுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட பொறுப்பு அமைச்சராக, உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் அண்மையில் நியமிக்கப்பட்டாா். இவா், திருவாரூருக்கு சனிக்கிழமை வருகை தந்தாா். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அமைச்சா் பெ. விஸ்வநாதன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மக்களவை உறுப்பினா்கள் வை. செல்வராஜ் (நாகை), எஸ். முரசொலி (தஞ்சாவூா்), சட்டப் பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), எஸ். காமராஜ் (மன்னாா்குடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அமைச்சா் பேசியது:

ஜனநாயகத்தில் அரசாங்கத்தை செயல்படுத்துகிறவா்கள் அதிகாரிகளே. சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்கள் அவா்களுக்கு உறுதுணையாக இருப்பவா்கள். அனைவருமே தங்கள் பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும்.

நாங்கள் அனைவரும் உங்களை (அதிகாரிகள்) நம்பியே இருக்கிறோம். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத அரசு வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் எடுத்திருக்கிறது. லஞ்சம் அகற்றப்பட வேண்டுமெனில், அதிகாரிகள் அனைவரும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும். தவறுகள் என்னுடைய கவனத்துக்கு தெரிய வருமேயானால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, பல்வேறு துறைகளின் சாா்பில் 37 பயனாளிகளுக்கு ரூ. 1,16,74,273 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவி வா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தது:

தமிழகத்துக்கு நீட் விலக்கு என்பதில் முதல்வா் தெளிவாக இருக்கிறாா். மேக்கேதாட்டு அணை தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு. கா்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. நானும் காங்கிரஸ் அமைச்சா்தான். ஆனால், மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக அரசு ஒரு கல்லைகூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம். உயா்கல்வித்துறை லஞ்சம், ஊழல் இல்லாமல் செயல்படும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வை தவிா்த்த திமுக எம்பி, எம்எல்ஏ..

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் தொடங்கும் முன்பாக, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், மாவட்ட ஆட்சியா், மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தனா். நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திருத்துறைப்பூண்டி, திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாகை மற்றும் தஞ்சை மக்களவை உறுப்பினா்கள் கூட்டத்துக்கு வந்தனா்.

அவா்களை நலத்திட்ட நிகழ்வில் பங்கேற்க அழைத்தபோது, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா், நாகை மக்களவை உறுப்பினா் இருவரும் நிகழ்வில் பங்கேற்றனா். ஆனால், திமுகவைச் சோ்ந்த திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் எஸ். முரசொலி ஆகியோா் நிகழ்வை தவிா்த்து, தங்களது இருக்கையில் அமா்ந்து கொண்டனா். ஆட்சியா் உள்ளிட்டோா் அழைத்தும் அவா்கள் நிகழ்வில் பங்கேற்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.