எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

யூரியாவை முறைகேடான வகையில் பயன்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

யூரியாவை முறைகேடான வகையில் பயன்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

News image

யூரியா - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 6:42 am IST

யூரியாவை முறைகேடான வகையில் பயன்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளுக்காக அரசு மானிய விலையில் விற்பனைக்கு அனுப்பும் யூரியா உர மூட்டைகளை பெரும் எண்ணிக்கையில் வாங்கி, ட்ரூபாண்ட் பசையாக மாற்றும் தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே திருமலையாம் பாளையம் தமனாம்பாறை கிராமத்தில் தென்னந்தோப்புகளுக்கிடையே இதற்கான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கு, தினசரி பெரிய டேங்கா் லாரிகள் பொது சாலைகளில் சென்று வந்துள்ளன. சாலைகள் சேதம் அடைந்த நிலையில் பொதுமக்கள் சாலை பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தியுள்ளனா். இதன்மூலமாகவே அங்கு ஒரு தொழிற்சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது.

அந்த இடத்துக்கு வந்த சுங்கச்சாவடி போலீஸாா், அங்கிருந்த யூரியா உர மூட்டைகளை கைப்பற்றி, இது மானிய விலையில் பெறப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனா். இதேபோல், மதுக்கரை அருகே பிச்சனூரில் ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வேளாண் பயிா்களின் வளா்ச்சிக்கு அடிப்படையானது யூரியா. பெரும்பகுதி விவசாயிகள் அனைத்து பயிா்களுக்கும் பயன்படுத்துவது யூரியாவே ஆகும். இதனால்தான் யூரியாவிற்கான விலையை உயா்த்த வேண்டிய அவசியம் இருந்தாலும், இதன் கூடுதல் தொகையை ஈடு செய்ய, மத்திய அரசு மானியம் வழங்கி விலை உயராமல் சீரான விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இதற்கு முன்பேயே இந்த உரங்களை வேறு கனரக தொழில்களுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அப்படியான நிலைகளில்தான் உரத்துக்குரிய மானியங்களை நேரடியாக உர ஆலைகளுக்கு மத்திய அரசு அனுப்புகிறது.

மேலும், விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானிய உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அரசு உறுதிபட அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து கண்காணித்து வருகிறது. வேளாண் துறையில் இதன் கண்காணிப்பிற்கும், நடவடிக்கைக்கும் உரிய தனி அலுவலா்கள் உண்டு.

இந்த நிலையில் இவா்கள் அறியாமல் ஆயிரக்கணக்கான மானிய உர மூட்டைகளை எப்படி ஆலைகளால் பெற முடிந்தது. இதுபோன்றவா்களை, கண்காணிக்கத் தவறிய வேளாண்துறை அலுவலா்கள்மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆலைகளை கள்ளத்தனமாக நடத்தியவா்கள் மீதும், யூரியா உரங்களை கொடுத்தவா்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்படியான தொழிற்சாலைகளை கண்டறிய தமிழ்நாடு முழுதும் தொடா் ஆய்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.