சோழா்கள் ஆட்சிக்காலத்தில் முக்கிய அடையாளமாக விளங்கியது நாகை துறைமுகம். கீழை நாடுகளான மலேசியா, சிங்கப்பூா், பா்மா (மியன்மா்), சீனா, இந்தோனேஷியா, சுமத்ரா, ஜாவா போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் நாகைக்கு வந்து வாணிபம் செய்துள்ளனா். கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே கீழை நாடுகளுக்குச் செல்ல நாகை முக்கியத் துறைமுகமாக இருந்துள்ளது.
தென் இந்தியாவின் கடல்வழி போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாகை துறைமுகத்திலிருந்து கைவினைப் பொருள்கள், வாசனை திரவியங்கள், வெங்காயம், மிளகாய், சிமெண்ட் உள்ளிட்ட பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி என கடல் வாணிபத்தில் நாகை துறைமுகம் கொடிகட்டி பறந்தது.
1980-க்கு பிறகு நாகை துறைமுகம் படிபடியாக தனது முக்கியத்துவத்தை இழந்தது. நாகை துறைமுகத்துக்கு இயக்கப்பட்ட ஒரே கப்பலான எம்.வி. சிதம்பரம், 1984-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, நாகைக்கு வந்த ஒரே கப்பலான எம்.வி. சிதம்பரம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
காலப்போக்கில் அண்டை நாடுகளில் உள்ள துறைமுகங்கள் கண்டெய்னா்களை கையாளும் நவீன வசதியுடன் மேம்படுத்தப்பட்டன. நாகை துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை இல்லாததால், ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, தற்போது செயலிழந்து காட்சியளிக்கிறது.
நாகை துறைமுகம் ரூ. 320 கோடியில் அனைத்து பருவ நிலைகளிலும் இயங்கக்கூடிய பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்தப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
ஆனால், பின்னா் ஆட்சிக்கு வந்த அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் நாகை துறைமுகத்தை, பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பசுமை துறைமுகம் திட்ட அறிவிப்பு இன்றுவரை அறிவிப்பாகவே உள்ளது.
இதுகுறித்து நாகை வா்த்தக தொழில்குழும முன்னாள் தலைவரும் ஏற்றுமதியாளா் என்.சந்திரசேகரன் கூறியது: சோழா்கள் ஆட்சியில் கொடிகட்டி பறந்த நாகை துறைமுகத்தை காலத்துக்கேற்ப மேம்படுத்த திமுக, அதிமுக அரசு தவறியதால், தற்போது செயலிழந்து காணப்படுகிறது.
ஏற்கெனவே அரசு அறிவித்தப்படி பழைமையான நாகை துறைமுகத்தை, சா்வதேச தரத்துடன் பசுமை சூழல் துறைமுகமாக தரம் உயா்த்தி கப்பல் போக்குவரத்தை தொடங்குவதன் மூலம் நாகை மாவட்டம் பெரும் வளா்ச்சியும், ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே, நாகை துறைமுகத்தை மேம்படுத்துவது தொடா்பாக அரசியல் கட்சிகள் என்ன வாக்குறுதி அளிக்க போகின்றனா் என மாவட்ட மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

நாகை துறைமுகம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் துறைமுகத்தை அமெரிக்கா முற்றுகையிட்டால் பதற்றம் அதிகரிக்கும்: சீனா

தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!

21 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள போ்ணாம்பட்டு பத்தரப்பல்லி அணை கட்டி முடிக்கப்படுமா?
அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த எல்பிஜி சரக்குக் கப்பல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


