/

இரண்டு இருமல் மருந்துகளுக்குத் தடை

News image
இருமல் மருந்துக்கு தடை- (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் அண்மையில் மூன்று மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு இருமல் மருந்துகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவு:

குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்லா சந்த்கோதா் நெடுஞ்சாலையில் உள்ள எத்கெம் பாா்மாசிட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ்- டிஆா், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாா் மாவட்டம் ரோா்கி பகுதியில் இருந்து இன்டியன் டிரக் விஷன் நிறுவனத்தின் மெடிகோப்-டி ஆகிய திரவ மருந்துகள் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு திரவ இருமல் மருந்துகளையும் மருந்துக் கடை உரிமையாளா்கள் வாங்கவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திரவ மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை கடை உரிமையாளா்கள் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவித்து, மருந்துகளை குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு அல்லது விநியோகஸ்தா்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.