வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் 89-ஆம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நினைவுத்தூண் பகுதிக்குச் செல்லும் சாலை பராமரிப்பில்லாமல் பாழாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் உப்புக்கு வரிவிதித்த ஆங்கிலேய அரசின் அடக்குமுறையைக் கண்டித்து தண்டியில் காந்தியடிகள் தலைமையில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இதேபோல், தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்களில், தினமணி'யின் முன்னாள் ஆசிரியர் ஏ.எம். சிவராமனும் ஒருவர்.
உப்பு சத்தியாகிரகப் போராட்டம் வெற்றியடைந்ததில், வேதாரண்யம் பகுதி மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இதை நினைவுகூறும் வகையில், வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்தியாகிரக நினைவுக் கட்டடம், உப்பை அள்ளிய அகஸ்தியம்பள்ளியில் சத்தியாகிரக நினைவுத் தூண், தியாகி வைரப்பன் நினைவுத் தூண், தியாகிகளைப் பாதுகாத்து உணவளித்த தோப்புத்துறை பள்ளிவாசல் போன்றவை போராட்ட நினைவுகளை இன்றளவும் பறைசாற்றி வருகின்றன.
அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுத் தூண் பகுதி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் அடையாளமாகத் திகழ்கிறது.
அடிப்படை வசதிகள் குறைபாடு: இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முக்கியப் பிரமுகர்கள் நினைவுத் தூண் உள்ளிட்ட கட்டடங்களைப் பார்வையிட்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது வழக்கம். ஆயினும், கடந்த சில ஆண்டுகளாக இதன் சிறப்பம்சம் மெல்ல மெல்ல குன்றி வருகிறதோ என்ற ஏக்கம் சமூக ஆர்வலர்களை பீடித்துள்ளது. ஏனெனில், வேதாரண்யம்- கோடியக்கரை பிரதான சாலையில் இருந்து நினைவிடப் பகுதிக்குச் செல்லும் 15 கி.மீ. தார்ச்சாலை கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நினைவிடத்துக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. இளைய தலைமுறையினருக்கு கடந்தகால வரலாற்றை இயம்பும் இடத்துக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில், எதிர்காலத்திலாவது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.