/

தேநீர் கடையில் பாரம்பரியத்தை நினைவூட்டும் குழிப்பணியாரம்..!

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் வகை பால் விற்பனை அதிகரித்துவிட்ட நிலையிலும், வேதாரண்யம் அருகே வீடுகளில் கறந்து கொடுக்கும் மாட்டுப்

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:33 am

கே.பி. அம்​பி​கா​பதி


பதப்படுத்தப்பட்ட பாக்கெட் வகை பால் விற்பனை அதிகரித்துவிட்ட நிலையிலும், வேதாரண்யம் அருகே வீடுகளில் கறந்து கொடுக்கும் மாட்டுப் பாலை மட்டுமே பயன்படுத்தி சுவையூட்டும் தேநீர் கடையில், பாரம்பரிய பலகாரமான குழிப்பணியாரமும் விற்பனையாவது இயற்கை ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம், இயற்கை வளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வேளாண் தொழிலில் இயந்திரமயம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கால்நடை வளர்ப்புத் தொழில் கேள்விக்குறியாகவே மாறி வருகிறது. அதிலும், கறவை மாடுகள் வளர்ப்பு கிராமப்புறங்களில்கூட பெரும் சவாலாகிவிட்டன. வேகமாக அதிகரித்து சந்தை வாய்ப்பைப் பெற்று வரும் பதப்படுத்தப்பட்ட பால் வகை விற்பனை அமோகமடைந்து வரும் நிலையில், மாடுகளிடம் உடனே கறந்த பாலை மட்டுமே பயன்படுத்தி தேநீர் கடை நடத்துவது அரிதாகிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் பால் உற்பத்தி கால்நடைகளில் இருந்து கிடைக்கிறது என்பதற்கு பதிலாக, பாக்கெட்டுகளில் இருந்துதான் கிடைக்கிறது என இளைய தலைமுறைகள் பதிலாகக் கூறும் அளவுக்கு நிலமை மாறி வருகிறது.
இந்நிலையிலும், இயற்கையான பால் உற்பத்தியை கொடுப்பவர்களும், அதற்கு சந்தை வாய்ப்பை அளிப்பதை கொள்கையாக ஏற்று செயல்படுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் கடைவீதியில்  செம்போடை சாலை பகுதியில் உள்ளது ஜி.கே. மூர்த்தி தேநீர் கடை. இந்த கடை  எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட பால் வகையை வாங்கி தேநீர், காபி தயாரிப்பதையே பெரும்பாலான தேநீர் கடைக்காரர்களும் விரும்புகின்றனர். அதற்குப் பல்வேறு காரணங்களையும் கூறுவர்.  இதில் மூர்த்தி விலக்கானவர். நோக்கமும், செயல்பாடும் வேறுபட்டுள்ள இவரது தேநீர் கடையில் மட்டும், பதப்படுத்தப்பட்ட பால் வகையை  தவிர்த்துள்ளார்.
சுற்றுப் பகுதி கிராமங்களில் வசிக்கும் சிறு விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வளர்க்கும் நாட்டு மாடுகளில் கறந்த பாலை இங்குதான் விற்பனை செய்கின்றனர். அதிகாலையில் தொடங்கி அவ்வப்போது கடைக்கு பால் கொண்டு வரும் வாடிக்கையாளர்கள் சுமார் 50 பேர் உள்ளனர். ஒரு லிட்டர் முதல் 5 லிட்டர் வரையில் கறந்த பாலை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 30 வீதம் ரொக்கம் கொடுத்து விடுகிறார். தேநீர், காபி தயாரித்ததுபோக மீதமுள்ள பால் தயிராக்கப்படுகிறது. சர்க்கரை போட்டது, போடாதது, வெல்லம் சேர்த்தது என எல்லா தேநீரும் ரூ. 8 என்ற ஒரே விலைதான்.
இயற்கை முறையில் கிடைக்கும் பாலில் தயாரிக்கப்படும் தேநீர், காபியை அருந்த வரும் நபர்களின் பரபரப்புக்கு குறைவில்லை. எல்லா தேநீர் கடைகளைப்போலவே போண்டா, வடை போன்ற பலகார வகை இங்கு கிடைத்தாலும், பாரம்பரியமாக கருதப்படும் கருப்பரிசி மாவில் செய்த குழிப்பணியாரம் மற்றுமொரு சிறப்பு. 5  பணியாரங்கள் கொண்ட ஒரு செட் ரூ.10 என்ற குறைந்த விலைக்கே விற்பனை செய்கிறார். கரியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.கே. மூர்த்தி (48). சிறு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் குளிர்பானம் விற்பனை செய்யத் தொடங்கிய இவர், இப்போது தனக்குள் ஒரு கொள்கையை ஏற்படுத்திக்கொண்டு தேநீர்  கடையை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
பாக்கெட் பால் அடர்த்தி அதிகம். அதிக டீ போடலாம். ஆனால், இயற்கையாக கிடைக்கும் மாட்டுப் பால் அடர்த்தி குறைவாகத்தான் இருக்கும். ஆனால், பாதிப்பு ஏதுமில்லை. குறைந்த லாபம் இருந்தாலும்போதும், இந்த பணியை செய்வதில் மன நிறைவு இருப்பதாகக் கூறுகிறார் மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.