எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேநீர்க் கடையில் ஒரு ரமணன்!

வேதாரண்யம் அருகே உணவகத்தோடு இணைந்த தேநீர்க் கடையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுப்பகுதி விவசாயிகள் பயனடையும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:30 pm

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம் அருகே உணவகத்தோடு இணைந்த தேநீர்க் கடையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுப்பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில், நாள்தோறும் மழை தொடர்பான வானிலை முன்னறிவிப்பு ஒட்டப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கிராமப்புறப் பகுதியான தகட்டூர் கடை வீதியில் தேநீர்க் கடையுடன் கூடிய உணவகத்தை பல்லாண்டுகளாக நடத்தி வருபவர் க. நடராஜன்.
இந்த உணவகத்தின் சுவரில் நாள்தோறும் எழுதி ஒட்டப்படும் வானிலை முன்னறிவிப்புகள் விவசாயிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது.
அறிவிப்புகளில் சொல்லப்படும் வானிலை கணிப்புகள் பெரும்பாலும் நிகழ்ந்து விடுவதே இதற்கு காரணமாகும்.
உணவகம் நடத்தும் விவசாயி நடராஜனின் மூத்த மகன் செல்வகுமார் (43) கணினி மூலம் கணித்து தரும் தகவல்கள்தான் இங்கு கடந்த 15 ஆண்டுகளாக வானிலை முன்னறிவிப்பாகத் தரப்படுகிறது.
 பிளஸ் 2 படிக்கும்போதே வானிலை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட செல்வகுமார், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இறால் குஞ்சுகளைப்  பொரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
நிறுவனத்தில் கடல் நீர்மட்ட பருவநிலையைக் கண்காணிக்கும் தொழில்நுட்பப் பிரிவில் இருந்துள்ளார்.
 அப்போது முதல் கணினி வாயிலாக கணிப்புகளைப் தயார்செய்து தனது கிராம விவசாயிகளுக்குத் தந்துள்ளார். இப்படி தொடங்கிய இந்தச் சேவையை  2000-ஆம் ஆண்டில் தனக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்த பிறகும் விடவில்லை.
ஓய்வு நேரத்தில் கணினி மூலம் கணிக்கும் வானிலையை பதிவு செய்கிறார். கடையில் எழுதப்படும் முன்னறிவிப்பு தகவல்களை விவசாயிகள் மட்டுமன்றி  குறுந்தகவலாகவும் செல்லிடப்பேசியிலும் தெரிந்துகொள்வோர்தான் அதிகம்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் முன்னோடி விவசாயிகள், நிறுவனங்கள் என நாள்தோறும் சுமார் 1,500 பேருக்குமேல் இவரது தகவல் சென்றடைகிறதாம்.
தற்போது ஆசிரியராகப்  பணியாற்றும் நீடாமங்கலத்தை அடுத்த செருமங்கலம், ஏற்கெனவே  பணிபுரிந்த வலங்கைமான், மன்னார்குடி போன்ற இடங்களில் கடைகள் மற்றும் பொது  இடங்களிலும் தகவல்களை அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் செல்வகுமார்.
நிகழ் பருவம் எப்படி?:
காவிரி பிரச்னையோடு, மழையும் பொய்த்து வரும் நிலையில் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை எழுதப்பட்டுள்ள முன்னறிவிப்பு விவசாயிகளுக்கு ஆறுதலை தருவதாக இருந்தது.
 அக்டோபர் 19 இரவு லேசாக மழை தொடங்கும். 20-இல் மிதமாகவும், 21-இல் கனமழையாகவும், 22,23 தேதிகளில் சற்று அதிக கனமழையாகவும் இருக்கும். 24-31-க்குள்  ஏதாவது ஒருநாளில் பருவமழை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கொழும்புக்கு அருகே ஒரு காற்று சுழற்சி, அரபிக் கடல் லட்சத் தீவுக்கு தென்பகுதியில் ஒரு காற்று சுழற்சி, அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி என மூன்று காற்று சுழற்சிகள் உள்ளன.
இவை அனைத்தும் பசிபிக் கடலில் பிலிப்பின்ஸ் அருகே நிலைகொண்டுள்ள அதிதீவிர மற்றும் சூப்பர் புயல்களால் ஈர்க்கப்பட்டுள்ளதால், பிலிப்பின்ஸ் பக்கம் காற்று திசை மாறியுள்ளது.
 இலங்கை, லட்சத்தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தென் மாவட்டங்களில் தூறல், மேகமூட்டம், அக்டோபர் 19 வரை மூடு பனி இருக்கும். அக்.20-25 தேதிகளில் இலங்கைக்கு அருகே காற்று சுழற்சி ஏற்பட்டு டெல்டா பகுதிக்கு மழை தரும். நவம்பரில் சீரான மழை இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகுபடி பணியைத் தொடங்க மட்டுமல்லாது செங்கல் சூளை எரிப்போர், பயிர்களுக்கு மருந்துகள் அடிக்க, உர மேலாண்மை செய்யும் நேரத்தில் மழை வருமா என தெரிந்துகொள்ளவும் விவசாயிகள் பலரும் இவரை அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர்.
சுற்றுப்பகுதி கிராம விவசாயிகள் இவரை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ரமணனைப் போல பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.